

சென்னை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜூன் 12-ஆம் தேதி வரை காத்திருக்காமல் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர்," மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 46,000 கன அடி தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115 அடியாக உயர்ந்திருக்கிறது. நீர்வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் அடுத்த இரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு உழவர்கள் ஆயத்தமாகி விட்டதால், ஜூன் 12-ஆம் தேதி வரை காத்திருக்காமல் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும். முன்கூட்டியே குறுவை சாகுபடியை தொடங்கினால், வடகிழக்கு மழையிலிருந்து பயிர்களை காக்க முடியும்.
மேட்டூர் அணை நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைக் கணக்கிட்டு அணை திறக்கும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், அடியுரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.