Published : 05 May 2016 12:42 PM
Last Updated : 05 May 2016 12:42 PM

தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டப்பட்டுள்ளன: முத்தரசன் குற்றச்சாட்டு

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் பத்மநாபனுக்கு ஆதரவாக, இந்திய கம்யூ. மாநில செயலாளர் எம்.முத்தரசன் காந்திபுரம் பகுதியில் பேசியதாவது:

ஜெயலலிதாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக சொத்துக் குவிப்பு வழக்கு இருந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் வழக்கின் தீர்ப்பு வெளிவந்து அவர் சிறைக்கு செல்லலாம். சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு நடந்துகொண்டு இருக்கும்போதே ஜெயலலிதாவின் உடன் பிறவாத சகோதரி ரூ.1,000 கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தபோது அமைதியாக அமர்ந்திருந்த ஜெயலலிதா தற்போது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது வேடிக்கையானது.

தற்போது, அரசியல் என்பது சம்பாதிப்பதற்கான இடமாக மாறிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்றார்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கரூரில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளரான அன்புநாதன் என்பவர் வீட்டில் ரூ.500 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் தேர்தல் அதிகாரிகளோ முதலில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்படட்து எனவும் பின்னர் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உண்மை மறைக்கப்படுகிறது.

தற்போது அன்புநாதனைக் காணவில்லை என்று சொல்வது மர்மமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் மூடி மறைக்கும் விதத்தில் செயல்படுகிறது. அதன் கரங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் மோடி அரசு ஜெயலலி தாவை காப்பாற்ற முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x