Published : 21 May 2022 06:56 AM
Last Updated : 21 May 2022 06:56 AM

4 ஆயிரம் மையங்களில் இன்று குரூப் 2 தேர்வு - 11.78 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர்

சென்னை / சிவகங்கை: அரசுத் துறைகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 11.78 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர்.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் 4,012 தேர்வு மையங்களில் இன்று நடக்கிறது. 4.96 லட்சம் ஆண்கள், 6.82 லட்சம் பெண்கள், 48 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11.78 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 14,534 பேர் மாற்றுத் திறனாளிகள்.

இத்தேர்வு கொள்குறி வினாத்தாள் முறையில் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. காலை 9.30 முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். அனைவரும் 8.59 மணிக்குள் தேர்வறைக்குள் வந்துவிட வேண்டும். தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை அனைத்து பக்கங்களுடன் முழுமையாக பிரின்ட் எடுத்துவர வேண்டும். ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையும் வைத்திருக்க வேண்டும். இதுதவிர, ஹால்டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிக்காக 323 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வு முடிவை ஜூன் மாத இறுதியில் வெளியிடவும், அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு செப்டம்பரில் முதன்மை தேர்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடைத்தாளில் புதிய நடைமுறை

கடந்த காலங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இதை தடுக்கும் வகையில், விடைத்தாளில் (ஓஎம்ஆர் சீட்) பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி, ஓஎம்ஆர் சீட்டில் வினாத் தொகுப்பு எண்ணுக்கான வட்டங்களை நிரப்பாமல் விட்டால், விடைத்தாள் செல்லாது. மேலும் வினாத்தாள் தொகுப்பு எண்ணை சரியாக நிரப்பாவிட்டாலோ, அதற்குரிய கட்டங்களில் எழுதவில்லை என்றாலோ 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

ஒவ்வொரு கேள்விக்கும் ‘ஏ,’ ‘பி’, ‘சி,’ ‘டி’ என 4 விடைகள் தரப்பட்டிருக்கும். விடை தெரிந்தால் அதற்குரிய வட்டத்தை நிரப்பவேண்டும். விடை தெரியாவிட்டால், அதை குறிக்கும் வகையில் ‘இ’ என்ற வட்டத்தை நிரப்ப வேண்டும். எந்த வட்டத்தையும் நிரப்பாமல் விட்டால் 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

தேர்வு எழுதி முடித்ததும், விடைகளில் ‘ஏ,’ ‘பி,’ ‘சி,’ ‘டி,’ ‘இ’-யை எத்தனை முறை நிரப்பியுள்ளீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். அதை மொத்தமாக கணக்கிட்டு, கூட்டியும் எழுத வேண்டும். இதற்காக கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும். அவ்வாறு குறிக்காவிட்டாலும், குறித்ததில் தவறு இருந்தாலும் 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும். தேர்வு முடிந்ததும், இடதுகை பெருவிரல் ரேகை பதிவை அதற்குரிய கட்டத்தில் இட வேண்டும். இல்லாவிட்டால் 2 மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x