Published : 21 May 2022 07:15 AM
Last Updated : 21 May 2022 07:15 AM

பாமக தலைவராக நியமிக்கப்படுகிறார் அன்புமணி: கட்சியை பலப்படுத்தி ஆட்சியைப் பிடிக்க வியூகம்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட உள்ளார். கட்சியை பலப்படுத்தி, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பாமகவினர் தெரிவிக்கின்றனர்.

வட மாவட்டங்களில் கனிசமான வாக்குவங்கி வைத்துள்ள பாமக, ஆரம்பத்தில் இருந்து அதிமுக, திமுக என மாறி மாறிகூட்டணி வைத்து, தேர்தல்களை சந்தித்துவருகிறது. இதனால், பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலை `மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்ற முழக்கத்துடன் தனித்து சந்தித்த பாமக-வுக்கு பெரிய தோல்வியே கிடைத்தது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி உட்பட அனைவரும் தோல்வி அடைந்தனர். இது கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

கட்சி தொடங்கி 33 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் கவலையில் உள்ளார். பாமக ஆட்சியைப் பிடிக்க முடியாதது தொடர்பாக, தான் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலும் அவர் ஆதங்கப்படுகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை ராமதாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் வகுத்துள்ளனர். முதல்கட்டமாக, உள்ளாட்சிகளில் கட்சியைப் பலப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இருந்தாலும், கடந்த ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாமக தனித்துப் போட்டியிட்டது. அடுத்தகட்டமாக, கட்சியைபலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணியை கட்சித் தலைவராக கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28-ம் தேதி சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெறும் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் வெளியாக உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு கட்சித் தலைவர் ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார்.

அதேசமயம், கட்சித் தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகளாவதையொட்டி, அவருக்கு வரும் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களிடம் கேட்டபோது, “பாமகவின் வாக்கு வங்கி குறையவில்லை. கிராமப்புறங்களில் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கட்சி தொடங்கி 33 ஆண்டுகளாகியும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாததை கூட்டங்களில் வருத்தத்துடன் தெரிவித்து வருகிறார் ராமதாஸ். எனவே, கட்சியை மேலும் பலப்படுத்த, கட்சித் தலைவராக அன்புமணியைக் கொண்டுவர வேண்டுமெனவிருப்பம் தெரிவித்திருக்கிறோம்.

வரும் 28-ம் தேதி நடைபெறும் சிறப்புபொதுக்குழுவில், கட்சித் தலைவராக அன்புமணியை அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜி.கே.மணிக்கு வேறு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தலைமையில்கூட்டணி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பாமக ஆட்சியைப் பிடிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x