மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீதான எப்ஐஆரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீதான எப்ஐஆரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published on

புதுடெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல கோடி ரூபாய்க்கான டெண்டர் ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி முறைகேடு செய்துள்ளதாக குற்றம்சாட்டி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிசார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் புலன்விசாரணையை 10 வாரங்களில் முடித்து கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்துள்ள தலைமைநீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான எப்ஐஆரை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தி காவல்துறை அதிகாரி பொன்னி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை, மனுதாரரான எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in