

விழுப்புரம்: தமிழகம் முழுவதும் 1,000 குடும்பஅட்டைகளுக்கு மேல் உள்ள 3 ஆயிரம் ரேஷன் கடைகளை இரண்டாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று உணவுத் துறைஅமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் நேற்று ஆய்வுப்பணி நடைபெற்றது. அப்போது,காணை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம், காணைகுப்பத்தில் திறந்தவெளி நெல்சேகரிப்பு மையம், பெரும்பாக்கத்தில் நியாயவிலைக் கடை ஆகியவற்றை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவுத் துறைஅமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
தமிழகம் முழுவதும் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 3 ஆயிரம் ரேஷன் கடைகளை இரண்டாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வாடகைக் கட்டிடத்தில்..
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 68 பகுதிநேர புதிய ரேஷன்கடைகள் வரும் ஜூலை மாதத்துக்குள் திறக்கப்படும். தமிழகம்முழுவதும் 7 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.
இந்தக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் புதிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றன.
ரூ. 2,600 கோடி சேமிப்பு
உணவுப் பொருள் வழங்கல்துறையில், முதல்வர் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் ரூ.2,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியைவிட, தற்போது தமிழகத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அங்கு தவறுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை 56 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் மீது விஜிலென்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றார்.
| விரைவில் கூடுதல் சர்க்கரை, உளுந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப்படும். பயோ மெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காலி இடங்களில் கூரை அமைக்கப்பட்டு அங்கு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்” என்று தெரிவித்தார். |