Published : 21 May 2022 06:11 AM
Last Updated : 21 May 2022 06:11 AM
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் வேத பாராயணம் செய்வது தொடர்பாக தென்கலை மற்றும் வடகலை பிரிவினருக்கு இடையிலான பிரச்சினையில் தென்கலை பிரிவினர் மட்டும் வேத பாராயணம் செய்யலாம் என்ற உதவி ஆணையர் உத்தரவையும், வடகலை பிரிவினரும் சேர்ந்து வேத பாராயணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தென்கலை பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோயில் உதவி ஆணையர் கடந்த 14-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து வடகலை பிரிவைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலைப் பிரிவினரும், சாதாரண பக்தர்களும் அமர வேண்டும் என்றும், முதலில் தென்கலை பிரிவினர் சைலேச தயாபாத்ரம் பாடவும், அதன்பிறகு வடகலை பிரிவினர் ராமானுஜ தயாபாத்ரம் பாடவும், அதன் பின்னர் தென்கலை, வடகலை, பிற பக்தர்கள் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் என்றும், நிறைவாக தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாழித் திருநாமமும், வடகலை பிரிவினர் தேசிகன் வாழித் திருநாமமும் பாட அனுமதிக்க வேண்டும் எனவும் கடந்த 17-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தென்கலை பிரிவைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “கோயிலில் பிரபந்தம் பாட தென்கலைப் பிரிவினருக்கு மட்டுமே தனிப்பட்ட உரிமை உள்ளது என்றும், இந்த உரிமை கடந்த 1915 மற்றும் 1963-ம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வடகலை பிரிவினருக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் வடகலை பிரிவினரையும் வேத பாராயணம் செய்ய தனி நீதிபதி அனுமதியளித்து இருப்பது மரபுகளுக்கும், உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது. எனவே தனி நீதிபதி கடந்த 17-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நேற்று அவசர வழக்காக நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக கடந்த 14-ம் தேதி, ‘தென்கலை பிரிவினர் மட்டும் பாட வேண்டும்’ என்ற அறநிலையத் துறை உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவையும், கடந்த 17-ம் தேதி, ‘வடகலைப் பிரிவினரும் இணைந்து பாட வேண்டும்’ என்ற தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT