

சென்னை: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அடர்புகை வெளியேறியதால், அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
சென்னையில் தினமும் சுமார் 5ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் சுமார் 2,500 டன் குப்பை, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் கொட்டப்பட்ட குப்பைகளால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.
இந்த கிடங்கின் கிழக்கு பகுதியில் நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் குப்பைகளில் தீப்பற்றத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து குப்பைகளில் மளமளவென தீ பரவியது. இதன் காரணமாக அவற்றிலிருந்து அடர்புகை வெளியேறியது. காற்று கிழக்கு நோக்கி வீசியதால், கிடங்கின் கிழக்கு பகுதியை நோக்கி புகை பரவி அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போர் கடும் சிரமத்துக்கு உள்ளாயினர்.
தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் தீயணைப்புத் துறை மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து, அவர்களுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணியில் 4 தீயணைப்பு லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி, தீப்பற்றி எரியும் பகுதியில் குப்பைகளை கலைத்து விடுதல், அவற்றின் மீது மண்ணைக் கொட்டுதல்போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 15-க்கும் மேற்பட்ட நடைகளில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தீயை அணைக்க தேவையான குடிநீர், தீயணைப்பு லாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 3 துறைகள் சார்பில் தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனிடையே தீப்பற்றிய பகுதியில் சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையர்ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் எஸ்.மனிஷ், தலைமைப் பொறியாளர் என்.மகேசன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
மீத்தேன் வாயு
தீ பற்றியது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதால், அவற்றிலிருந்து வெளியேறிய மீத்தேன் வாயு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்று நாட்டில் தினமும் 15 குப்பைகிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. டெல்லி போன்ற இடங்களில் தீயை அணைக்க 15 நாட்கள் ஆகின்றன. இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.
மாநகராட்சி அலட்சியம்
இதுபோன்று குப்பை கிடங்கில் ஏற்படும் தீ விபத்தைத் தடுக்க கிடங்கில் சிசிவிடி கேமராக்களை நிறுவி கண்காணிக்க வேண்டும். தீயணைப்புவாகனத்தையும் தயார் நிலையில் நிறுத்த வேண்டும். தீப்பற்றியதை சிசிடிவி கேமரா மூலம் அறிந்து உடனே தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியும், அதை மாநகாரட்சி நிர்வாகம் கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்ததாலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டு, காற்றுமாசால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.