Published : 21 May 2022 07:02 AM
Last Updated : 21 May 2022 07:02 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல் குவாரியில் சுமார் 300 அடி ஆழத்தில்பாறைகளை அள்ளும் பணி கடந்த 14-ம் தேதி நள்ளிரவு நடைபெற்ற போது மேல்மட்டத்தில் இருந்து ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில், இடையன்குளம் செல்வம் (25), ஆயர்குளம் முருகன் (25), விட்டிலாபுரம் முருகன் (31), காக்கைகுளம் செல்வகுமார் (30),நாட்டார்குளம் விஜய் (25), ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (42) ஆகிய 6 பேர் கற்குவியலுக்குள் சிக்கிக்கொண்டனர்.
விட்டிலாபுரம் முருகன், விஜய்ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆயன்குளம் முருகன், செல்வம், செல்வகுமார் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். 6-வது நபரான ராஜேந்திரனை மீட்கும் பணி நேற்று 6-வது நாளாக நடைபெற்றது. சரிந்து விழுந்த பெரிய பாறைகளுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் ராஜேந்திரன் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று மீட்புப் குழுவினர் கருதுகின்றனர். பெரிய பாறைகள் மூடியுள்ளதால் அவற்றில் 35 இடங்களில் துளையிட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்றது.
கல் குவாரி விபத்து தொடர்பாக குவாரிக்கு உரிமம் பெற்ற சங்கரநாராயணன், மேலாளர் ஜெபஸ்டின் ஆகியோரை முன்னீர்பள்ளம் போலீஸார் ஏற்கெனவே கைதுசெய்துள்ளனர். குவாரி உரிமையாளரான திசையன்விளையைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தேடிவந்தனர். இந்நிலையில், இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. தனிப்படை போலீஸார் நேற்று மங்களூரு சென்று, செல்வராஜ், குமார் ஆகியோரைப் பிடித்தனர். அவர்களை திருநெல்வேலிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திசையன்விளையில் உள்ள குவாரி உரிமையாளர் குமார் வீட்டில்போலீஸார் முறையான அனுமதியின்றி நேற்று முன்தினம் சோதனை நடத்தியபோது, அப்பகுதி வியாபாரிகள் கடைகளை அடைத்து, வீட்டுமுன்பு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், குமார் வீட்டில் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாகவும், அங்கு நிறுத்தியிருந்த அவரது காரை காணவில்லை என்றும் உறவினர்கள் நேற்று போலீஸாரிடம் தெரிவித்தனர். திசையன்விளை போலீஸார் விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT