Published : 21 May 2022 06:10 AM
Last Updated : 21 May 2022 06:10 AM

திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய புறவழிச்சாலை: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

தூத்துக்குடி: “திருச்செந்தூரில் பக்தர்களின் வசதிக்காக புறவழிச்சாலை அமைக்கப்படும்” என, அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான புத்தகத்தை வெளியிட்டு அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் 2.08 லட்சமாக இருந்த வாகனங்கள் தற்போது 7.15 லட்சமாக அதிகரித்துள்ளது. வாகனங்களின் பெருக்கத்தால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 14,912 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 1,255 சாலை விபத்துகளில் 390 பேர் மரணமடைந்துள்ளனர்.

சாலை விபத்துக்களை குறைக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் தமிழக முதல்வரின் ‘நம்மை காக்கும் 48' திட்டம். சாலை விபத்துகளை குறைக்கும் மாவட்டங்கள், மாநகராட்சிகளுக்கு பரிசுத் தொகைகளை முதல்வர் அறிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பு சட்டங்களை காவல் துறையினர் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். 2 சக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்கக்கூடாது. பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் அரசு விதிகளை மீறி அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது. ஹெல்மெட் அணிவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விதிகள், சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும். விலை மதிப்பு இல்லாத உயிர்களை காக்கவே இந்த நடவடிக்கைகள். இதில் எந்த சமரசத்துக்கும் அதிகாரிகள் இடம் கொடுக்கக்கூடாது.

தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் தூத்துக்குடியும் ஒன்று. எனவே, இம்மாவட்ட அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த 400 பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றார்.

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கண்ணபிரான், தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகரன், தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் என்.பாலமுருகன் கலந்துகொண்டனர்.

புறவழிச்சாலை

தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சாலையில் இருந்து செந்திலாண்டவர் கோயில் வள்ளி குகை வரைஒரு புறவழிச் சாலையும், அய்யாவழி கோயிலில் இருந்து கன்னியாகுமரி சாலை வரை ஒரு புறவழிச் சாலையும் அமைக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான திட்டஅறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலையில் உள்ள மீளவிட்டான் ரயில்வே மேம்பால பணிகள் ஜூலைமாதத்தில் முடிவடையும். தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளவல்லநாடு ஆற்று பாலத்தை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடி களை அகற்ற மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்றார்.

திருச்செந்தூரில் ஆய்வு

முன்னதாக திருச் செந்தூரில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திருச்செந்தூர்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சோனகன்விளை பகுதியில் மரக்கன்றுகள் நட்டுவைத்தார். அப்போது அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x