Published : 21 May 2022 06:51 AM
Last Updated : 21 May 2022 06:51 AM

பெரம்பலூர் | உதயநிதி படத்துக்கு பேனர் வைத்த காவலர் மீது வழக்கு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இரா.கதிரவன்(42). இவர், திமுகவுக்கு ஆதரவான கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி, அங்கு சென்று அவர் பணியில் சேரவில்லை என தெரிகிறது. இந்நிலையில், திமுக எம்எல்ஏவும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து நேற்று வெளியான நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் கதிரவன் நேற்று முன்தினம் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனரை வைத்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர், உடனடியாக அந்தப் பேனரை இரவோடு இரவாக அகற்றிவிட்டனர். ஆனாலும், அந்த பேனர் குறித்த படங்களை காவல் துறையினருக்கான வாட்ஸ் அப் குரூப்களில் கதிரவன் பகிர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

சீருடை பணியாளர் விதிகளை மீறி ஒரு சார்பான அரசியல் கருத்துகளை தொடர்ந்து பரப்பி வரும் தலைமைக் காவலர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர் வைத்திருந்ததாக இரா.கதிரவன் மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x