ஜெயலலிதாவின் முதல் 5 நடவடிக்கைகள்: வைகோவின் வரவேற்பும் யோசனைகளும்

ஜெயலலிதாவின் முதல் 5 நடவடிக்கைகள்: வைகோவின் வரவேற்பும் யோசனைகளும்
Updated on
1 min read

டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் வகையில் நேரத்தைக் குறைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் வகையில் நேரத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் படிப்படியான மதுவிலக்கு என்று முதல்வர் கொடுத்த வாக்குறுதி உண்மையிலேயே நடைமுறைக்கு வரும்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 6826 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 ஐ மட்டும் மூடுவதால் ஒரு பயனும் இல்லை. உடனடியாக 6826 கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தவிர, விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். ஆனால் அதே நேரம், விவசாயப் பெருங்குடி மக்கள் தேசிய வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் தமிழக அரசே செலுத்தி, அனைத்து விவசாயிகளுக்கும் கடன்சுமையை குறைக்க வேண்டும்.

நூறு யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை என்பதுடன், இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் தற்போதைய முறையை மாற்றி, மாதா மாதம் செலுத்திட அறிவிப்பு வெளியிட்டிருந்தால் சாதாரண, நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் என்றும், விசைத்தறிக்கு 750 யூனிட்டுகள் என்றும் உயர்த்தி இருப்பது, திருமண உதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கம், 8 கிராம் என்று உயர்த்தி இருப்பதும் வரவேற்புக்கு உரியது."

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in