Published : 12 May 2016 07:24 PM
Last Updated : 12 May 2016 07:24 PM

அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

நீதிக்கட்சியின் முன்னோடித் தலைவர் பிடி ராஜனின் பேரன், முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் ராஜனின் மகன் இப்படி பாரம்பரிய அடையாளங்களோடு மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக களம் காண்கிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

நியூயார்க் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர், உலக முன்னணி நிறுவனங்களின் நிதி ஆலோசகர் என பல நிலைகளில் பணியாற்றிய தியாகராஜனுக்கு தேர்தல் களம் புதிது. பரபரப்பான பிரச்சாரத்துக்கு நடுவில் தி இந்து ( தமிழ்) இணையதளத்துக்குக்காக திமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு சில கேள்விகள்.

அரசியல் களத்தில் புதியவரான உங்களுக்கு தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

அரசியல் என் ரத்தத்தில் கலந்திருக்கும் ஒன்று. மதுரை மக்கள் என்னை எப்போதும் சொந்த பிள்ளையாகத்தான் பார்க்கிறார்கள். எத்தனை நாடுகளில் ,என்ன வேலை பார்த்திருந்தாலும் என்னுடைய வேர் இந்த மதுரை தானே. நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக மக்கள் எனக்கு வரவேற்பு தருகிறார்கள். ரொம்ப பாசமாக இருக்கிறார்கள். பொதுவாக குழந்தைகள் எனக்கு அதிகம் பிடிக்கும் . பிரச்சாரத்தில் மக்களை சந்திக்கும் போது அந்த வீட்டுக் குழந்தைகள் எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தருகிறார்கள். இந்த மக்கள் மொத்த பேரும் என்னோட குடும்பம் என்கிற உணர்வு ஏற்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கருணாநிதி தலைமையில் நல்லாட்சிக்கு காத்திருக்கிறார்கள். அதனால் தேர்தல் களம் நிறைய நம்பிக்கை தருகிறது.

உங்கள் பார்வையில் மதுரை எப்படி இருக்கிறது?

55 நாடுகளுக்கு மேலாக சுற்றிப் பார்த்திருக்கிறேன். கென்யா நாட்டில் நைரோபி நகரில் உள்ளது கிபேரா. அடிப்படை சுகாதார வசதிகள் ஏதுமற்ற மிக மோசமான பகுதி தான் கிபேரா . சாக்கடைகள் நிறைந்த அந்த குடிசைப் பகுதியில், நான் சில காலம் சமுக சேவை செய்திருக்கிறேன். உலகில் சுகாதரா சீர்கேட்டுக்கு கிபேராவை உதாரணமாக சொல்ல முடியும் . கொடுமை என்னவென்றால் மதுரை மாநகரில் பல பகுதிகள் கிபேராவைப் போல மிக மிக மோசமான சூழலில் இருக்கின்றன. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 65 சதவீத மக்கள் குடிநீருக்காக தவிக்கிறார்கள். பாதாள சாக்கடை ஒழுங்காக இல்லை. வாய்க்கால்களில் கழிவு நீரை விட்டு சுகாதாரமில்லாத நிலைமை உருவாகியுள்ளது. இது தான் இன்றைக்கு மதுரையின் நிலைமை .

மதுரைக்கு நீங்கள் என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். அதுதான் எனது முதல் குறிக்கோள். பெரிய பெரிய வாக்குறுதிகளை விட , மக்கள் கண்ணியமான முறையில் வாழக்கூடிய வகையில், குடிநீர் வசதி, அடிக்கடி அடைத்துக் கொள்ளாத பாதாள சாக்கடை, தெருவில் கழிவுநீர் வழிந்தோடாத நிலை, தரமான சாலைகள், தடையில்லா மின்சாரம் , போக்குவரத்து நெரிசல் இல்லாத மதுரை இவை எல்லாம் தான் என்னுடைய அடிப்படை செயல்திட்டங்கள். இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை சொல்ல விரும்புகிறேன். என்ன தேவைகள் இருக்கிறது ? எப்படி தேவைகளை நிறைவேற்றுவது ? அரசின் திட்டங்கள் மூலமாக எதை செய்ய முடியும்? , தனியார் பங்களிப்பில் எதை சாதிக்க முடியும் ? என்பதில் மிகத் தெளிவான பார்வை எனக்கு இருக்கிறது. எனது இத்தனை ஆண்டு கால அனுபவம் , தொடர்புகள் இதை சாதிக்க செய்யும். நிச்சயம் மதுரை மத்திய தொகுதி மக்கள் மாற்றங்களை உணர்வார்கள். சரியான நபரை அவர்கள் தேர்ந்தெடுக்கும் போது தான் தொகுதிக்கான சரியான திட்டங்கள் நிறைவேறும். சரியான தகுதியான நபராக என்னை மக்கள் அறிவார்கள்.

தேர்தல் களத்தில் கட்சிக்காரர்களின் செயல்பாடுகள்?

கட்சியினர் பிரச்சாரத்தில் மிகத்தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். எனக்கு ஒரு வார்த்தை எப்போதும் பிடிக்கும் , ‘இன்றைய தினத்தை விட நாளை இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும் என்பதே அது. தேர்தல் களத்தில் கட்சிக்காரர்களிடம் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். என்னிடம் சிலவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ‘புதுமையான செயல்திட்டங்கள் மிக நன்றாக இருக்கிறது ‘ என்று எங்கள் தேர்தல் பணிக்குழு தலைவர் முன்னாள் மேயர் குழந்தைவேலு போன்ற முன்னோடிகள் சொல்வது எனக்கு திருப்தி தருகிறது.

தேர்தலில் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

நான் வெளிப்படையாக பேசிப் பழகியவன். தொகுதி முழுக்க பெரும் வரவேற்பை என்னால் உணர முடிகிறது. எனது தந்தையார் செய்த உதவிகளை மக்கள் மிகுந்த நன்றியோடு என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அடித்தட்டு மக்களின் அன்பு அபாரமாக உள்ளது. எல்லா நிலைகளில் உள்ள மக்களும் அதிக நம்பிக்கை தருகிறார்கள். எனக்கு கருத்து கணிப்பு மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. என்னால் தொகுதிக்கும் தமிழகத்துக்கும் நிறைய செய்ய முடியும் என்று நம்புகிறேன். என் கரங்கள் சுத்தமானவை . என்னால் முடியவில்லை என்றால் யாராலும் முடியாது என்று நம்புகிறேன். என்னை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன். அதே நேரம் இந்த வரவேற்பும் , அன்பும் , பாசமும் வாக்குகளாக மாறுகிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை அன்று பார்ப்போம். உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன் என்கிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x