Published : 20 May 2022 07:24 PM
Last Updated : 20 May 2022 07:24 PM

‘ஒரு நோயாளி மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சையை தொடர இணையப் பதிவேடு’ - ஆஸி. அதிகாரிகளுடன் தமிழக அரசு ஆலோசனை

சென்னை: மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான 'தாய்' சிகிச்சை முறையானது ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக நோயாளிகள் இணையப் பதிவேடு முறையை விரிவாக அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதர் சாரா கிர்லியூ, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி, ஆஸ்திரேலிய அரசு அலுவலர்கள் அப்துல் ஏக்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு நோயாளி, தமிழகத்தின் எந்த மருத்துவமனையை நாடினாலும், அவரது உடல் நலன் குறித்த விவரங்கள் இணையவழியே பதிவேற்றப்பட்டிருக்கும். அதன் வாயிலாக அவர் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சையைத் தொடர முடியும்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்கள், உத்திகளைக் கையாளுவதுடன் நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலான மருத்துவ வசதிகளை தமிழகம் கொண்டுள்ளது.

அந்த வரிசையில்தான் தற்போது ஆஸ்திரேலிய அரசுடன் கலந்துரையாடி வருகிறோம். அந்நாட்டில் நோயாளிகளின் விவரங்களை சேமிக்கும் இணையப் பதிவேட்டு நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. அது மிகவும் ஆக்கபூர்வமான திட்டமாகும். அதை தமிழகத்தில் செயல்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவர்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x