காந்தி சிலையை மையப்படுத்தி பல நிகழ்ச்சிகள்: கடற்கரையிலேயே வேறு இடத்திற்கு சிலையை மாற்ற முடிவு

காந்தி சிலையை மையப்படுத்தி பல நிகழ்ச்சிகள்: கடற்கரையிலேயே வேறு இடத்திற்கு சிலையை மாற்ற முடிவு
Updated on
1 min read

சென்னை: காந்தி சிலையை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதால், கடற்கரையிலேயே வேறு இடத்திற்கு சிலையை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், காந்தி சிலை பின்புறம் சுரங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகளால், காந்தி சிலை சேதமடைவதைத் தடுக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

அதன்படி, மெரினா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி ரிப்பன் மாளிகையில் சிலையை இடமாற்றி வைக்க மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால், இந்த முடிவை மாற்றி, கடற்கரையிலேயே வேறு இடத்தில் சிலையை வைக்க இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் காந்தியை சிலையை மையப்படுத்திதான் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். குறிப்பாக, குடியரசு தின அணி வகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் காந்தி சிலை உள்ள இடத்தை சுற்றிதான் நடைபெறும். மேலும் கடற்கரையின் அடையாளமாக காந்தி சிலை உள்ளது.

இப்படி இருக்கும்போது, ரிப்பன் மாளிகைக்கு சிலையை இடமாற்றம் செய்தால், இந்த நிகழ்ச்சிகளை நடத்த முடியாது நிலை ஏற்படும். எனவே கடற்கரையிலேயே வேறு இடத்தில் சிலையை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தடையில்லா சான்று வழங்கியுள்ளது. இதன்படி சிலையை இடமாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ள உள்ளது. இதற்காக இடம் கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையிலேயே ஓர் இடம் கண்டறிந்து அங்கு சிலையை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in