Published : 20 May 2022 02:00 PM
Last Updated : 20 May 2022 02:00 PM

என்எல்சி விவகாரம் | “புதிய சுரங்கத்திற்காக ஒரு கைப்பிடி மண்ணைக் கூட எடுக்க பாமக அனுமதிக்காது” - அன்புமணி

அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்.

சென்னை: வேலை வழங்காமல் என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் நோக்குடன் கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை அடுத்த கரிவெட்டி என்ற இடத்தில் நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களின் நிலங்களை பறிக்க என்எல்சி முயல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அதன் சுரங்கங்களை விரிவாக்கவும், புதிதாக மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைக்கவும் வசதியாக 49 கிராமங்களில் இருந்து 25,000-க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக கரிவெட்டி கிராமத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்த வசதியாக அவற்றை அளவீடு செய்ய தமிழக அரசின் நில எடுப்பு அதிகாரிகள் இன்று சென்றுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரிவெட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரும் மிகப்பெரிய அளவில் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு அதிகாரிகளின் இந்த செயல் சிறிதும் ஏற்றுக் கொள்ளத் தக்கது. என்.எல்.சிக்காக நிலம் வழங்கிய மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி, கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்காக வழங்கப்படவிருக்கும் தொகை மிகவும் குறைவு ஆகும். அதை ஏற்க மறுக்கும் மக்கள், தங்களின் நிலத்தை என்எல்சிக்கு வழங்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளனர். கடந்த மார்ச் மாதம் கத்தாழை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நில அளவீடு செய்ய அதிகாரிகள் சென்ற போது, அவர்களை வழி மறித்து மக்கள் போராடியுள்ளனர்.

அதன்பின்னர், கடந்த மார்ச் 27-ஆம் தேதி கம்மாபுரத்தை அடுத்துள்ள சிறுவரப்பூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், என்எல்சி சுரங்களுக்காக தங்களின் நிலங்களை வழங்க முடியாது என்று என்னிடம் திட்டவட்டமாக தெரிவித்தனர். அவர்களின் உணர்வு அரசிடமும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

நெய்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள கடலூர் மாவட்ட மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி விரிவாக எடுத்துரைத்தார். அதற்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ''சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்தவுடன் அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, என்எல்சி அதிகாரிகளை அழைத்து பேச்சு நடத்தும். அந்த பேச்சுக்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்'' என்று உறுதியளித்திருந்தார். ஆனால், இன்று வரை அத்தகைய கூட்டம் எதுவும் நடத்தப்பட வில்லை. ஆனால், என்எல்சி நிறுவனத்தை விட மிகவும் ஆர்வமாக தமிழக அரசின் நிலம் எடுப்புத் துறை அதிகாரிகளே நிலங்களை அளவிடச் செல்கின்றனர். இது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.

என்எல்சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கொடுத்த சுமார் 25,000 குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை; அதுமட்டுமின்றி, 25,000 குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்ட நிலையில், இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டும் 3500 பேர் பணியாற்றுகின்றனர். மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்க முடியாத ஒரு நிறுவனம், நிலக்கரியை வெட்டி எடுத்தாலும், வைரத்தை வெட்டி எடுத்தாலும் அதனால் உள்ளூர் மக்களுக்கு எந்த பயனுமில்லை. அது மக்களை வாழ்விக்க வந்த திட்டமாக கருதப்படாது; வாழ்வாதாரத்தை பறிக்க வந்த திட்டமாகவே பார்க்கப்படும்.

தங்கத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கு மாற்றாக பித்தளையைத் தருவது போன்ற இத்திட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. என்எல்சிக்காக இதுவரை நிலம் கொடுத்த மக்களின் குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு, போதிய இழப்பீடு வழங்காத நிலையில், ஏற்கெனவே உள்ள நிலக்கரி சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காகவோ, புதிய சுரங்கத்திற்காகவோ ஒரு கைப்பிடி மண்ணைக் கூட எடுக்க பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. நிலம் கையகப் படுத்துதலால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட, இனி பாதிக்கப்படக்கூடிய கடலூர் மாவட்ட மக்களைத் திரட்டி நானே தலைமையேற்று இந்த அநீதிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவேன்.

என்எல்சி நிலம் குறித்த விவகாரத்தில் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்க வேண்டுமே தவிர, நிலங்களை பறிக்க முயலும் என்எல்சி பக்கம் நிற்கக்கூடாது. சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்து, என்எல்சி அதிகாரிகளை அழைத்துப் பேசி நிலம் கொடுத்த மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x