Published : 20 May 2022 12:34 PM
Last Updated : 20 May 2022 12:34 PM

மே 22 முதல் 15 நாட்கள் உற்பத்தி நிறுத்தம்: ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு - லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

மங்கலத்தில் கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது.

திருப்பூர்: நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 22-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை 15 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை தயாரிப்புக்கு தேவையான மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நூல் விலை உயர்ந்து வருவதால் அதனை சார்ந்து இருந்து வருகிற தொழில்துறையினர் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோல் ஜாப் ஒர்க் தொழில்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம், மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் நூல் விலை உயர்வு குறித்தும், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

நூல் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருபகுதியினர்

இந்த கூட்டத்தில் திருப்பூர், பல்லடம், சோமனூர், அவினாசி, மங்கலம், தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடந்த ஆலோசனைக்கு பிறகு கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது: "நூல் விலை உயர்வின் காரணமாக கடந்த 2 நாட்கள் நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றோம். நூல் விலை உயர்வுக்கு ஏற்ப துணிகளின் விலையை உயர்த்த முடிவதில்லை. இதனால் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும், பஞ்சு ஏற்றுமதி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கோரியும் வருகிற 22-ந் தேதி முதல் ஜூன் மாதம் 5-ந் தேதி வரை 15 நாட்கள் வரை முழுமையாக உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காத நிலை ஏற்படும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள்.

மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க வேறு வழியின்றி இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும். பருத்தி நூலை தவிர்த்து செயற்கை இழையிலான நூல்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறோம். உற்பத்தி நிறுத்த காலகட்டத்தில் மத்திய, மாநில அரசுகளிடம் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவோம்'' என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x