தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு

தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.3-ம், வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை ரூ.8-ம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து, கடந்த அக்டோபரில் ரூ.915.50 ஆக உயர்ந்தது.

பின்னர் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. 5 மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் ரூ.50 உயர்த்தின. இதனால் சென்னையில் விலை ரூ.965.50 ஆக அதிகரித்தது.

அதன் பின்னர் கடந்த மே 7-ம் தேதியும் சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் ரூ.50 உயர்த்தின. இதனால் வீட்டு உபயோக சமையல் காஸ் விலை ரூ.1,015.50 ஆக அதிகரித்தது. இவ்வாறு கடந்த 17 மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.305 அதிகரித்து, ரூ.1,000-த்தை தாண்டியது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1018.50-க்கும், வணிக உபயோக சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507-க் கும் விற்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in