Last Updated : 20 May, 2022 04:36 AM

3  

Published : 20 May 2022 04:36 AM
Last Updated : 20 May 2022 04:36 AM

கருணாநிதி சிலை திறப்பில் வெங்கய்ய நாயுடு.. காங்கிரஸை விட்டு விலகி பாஜகவை நெருங்குகிறதா திமுக?

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்துவைப்பது, பேரறிவாளன் விடுதலை விவகாரம் உள்ளிட்ட நிகழ்வுகள், காங்கிரஸை விட்டு விலகி பாஜகவை திமுக நெருங்கிச் செல்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் எம்.பி., எம்எல்ஏக்களின் பிரதிநிதித்துவம் அடங்கிய வாக்காளர் குழும வாக்கு அடிப்படையில் நடைபெறுவதால், பாஜகவுக்கு 9,194 வாக்குகள் தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயற்சித்து வருகிறது.

அதேநேரம், பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் டிஆர்எஸ் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். ஒடிசாவில் நவீன் பட்நாயக்கும் பாஜகவுக்கு எதிரான சிந்தனையில் பேசி வருவதால், அக்கட்சிகளுக்கு பதிலாக, திமுகவின் ஆதரவை பெற பாஜக முயற்சி செய்து வருகிறது.

இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனை கூட்டத்தில் பேசிய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘வெறுப்பு, வன்முறை கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிறது. காங்கிரஸ் போல மாநில கட்சிகளால் பாஜகவுக்கு எதிராக போராட முடியாது’’ என்றார். இதற்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளிட்ட சில மாநில கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக தரப்பில் இதற்கு எதிர்ப்பு குரலோ, கருத்தோ தெரிவிக்கப்படவில்லை என்றாலும், மூத்த தலைவர்கள் இடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில்தான், தென்னிந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை வரும் 28-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட உள்ளது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை வைத்து சிலையை திறக்க திமுக தலைமை முடிவெடுத்தது.

பாஜகவில் இருந்த வெங்கய்ய நாயுடு, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் மிகுந்த பிடிப்பு கொண்டவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரை பாஜக அரசு களமிறக்க வாய்ப்பு உள்ளதாகவும் பேச்சு எழுந்துள்ளது.

இந்த சூழலில், மலர் கண்காட்சியை திறந்துவைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் ஊட்டி சென்றுள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் அங்கு தற்போது ஓய்வெடுத்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலை மையமாக வைத்து இருவரும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ராஜீவ் காந்திகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தற்போது விடுதலை செய்துள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க கூடாது என்று ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ், தற்போதும் தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்துள்ளது.

கடந்த 18-ம் தேதி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ‘‘நாட்டுக்கு இன்று மிகுந்த சோகமான தினம். காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டன் மட்டுமின்றி, பயங்கரவாதம், இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு சவால்விடும் சக்திகளுக்கு எதிராக போராடுகிற மற்றும் இந்தியா, இந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிற ஒவ்வொரு குடிமகனுக்கும் வருத்தமும், கோபமும் நிறைந்த நாள்’’ என்று தெரிவித்தார்.

போராட்டம் - கொண்டாட்டம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் அறப்போராட்டம் நடத்தப்பட்டது.

அதேநேரம், காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள திமுகவும், இதர கட்சிகளும் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடி வருவதும், தன்னை சந்தித்த பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்ததும் காங்கிரஸ் தரப்பில் சலசலப்பை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின், ‘‘இது திமுக அரசுக்கு கிடைத்த வெற்றி’’ என்று பதிவு செய்துள்ளதுடன், நளினி உட்பட சிறையில் உள்ள மற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்’’ என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

இத்தகைய தொடர் நிகழ்வுகளும், அரசியல் கட்சிகளின் நகர்வுகளும், காங்கிரஸைவிட்டு விலகி பாஜகவை திமுக நெருங்கிச் செல்கிறதோ என்ற எண்ணத்தை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கே தங்கள் ஆதரவு என்று பாஜக தரப்பில் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதை வைத்து எதிர்கால அரசியலை நிர்ணயிக்க முடியாது என்பது விவரம் தெரிந்தவர்களின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x