

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கல் குவாரி விபத்து விவகாரத்தில், மாவட்ட கனிமவள உதவி இயக்கு நர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில், 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக் கப்பட்ட பாறைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் கடந்த 14-ம் தேதி நள்ளிரவில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ராட்சத பாறை சரிந்து விழுந்ததில், லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார்(30), ராஜேந்திரன்(35), பொக்லைன் ஓட்டுநர் செல்வம் (27), ஆயர்குளம் லாரி கிளீனர் முருகன் (23),விட்டிலாபுரம் முருகன் (40), விஜய் (27) ஆகியோர் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் கடந்த 15-ம்தேதி ஈடுபட்டனர்.
அதில் விட்டிலாபுரம் முருகன்,நாட்டார்குளம் விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். 17 மணிநேரப் போராட்டத்துக்குப் பின்பு மீட்கப்பட்ட செல்வம், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியின்போது லாரி கிளீனர் முருகன்(23) சடலம் மீட்கப்பட்டது. நேற்று முன்தினம் செல்வகுமாரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று 5-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கூறியதாவது: கல் குவாரியில் சிக்கிய 6-வது நபரை மீட்கும் பணி தொடர்ந்து 5-வது நாளாக நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 பேர்கூறிய தகவல்படி அந்த இடத்தைமையப்படுத்தி 6-வது நபரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கல் குவாரியில் ஏற்பட்ட விபத்து சம்பந்தமாக மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த15-ம் தேதியில் இருந்து குவாரியின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமாக குவாரியை மூடுவது பற்றி கனிமவளத் துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் அறிவியல்ரீதியான ஆய்வு மேற்கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிபுணர்கள் வரவுள்ளனர். 60 நாட்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கல் குவாரி உரிமையாளர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கல் குவாரி உரிமையாளரான திசையன்விளையைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரது வீடுகளில் நேற்று தனிப்படையினர் சோதனையிட்டு ஆவணங்களைக் கைப்பற்றினர்.