Published : 20 May 2022 07:30 AM
Last Updated : 20 May 2022 07:30 AM

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி: மத்திய, மாநில அரசுகளின் உறுதிமொழி நிறைவேற்றப்படுமா?

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள்.

மதுரை: ரஷ்யா தொடுத்த போரால் உக்ரைனில் இருந்து சொந்த நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், கல்வியைத் தொடர முடியாமல் எதிர்காலத்தை நினைத்து பரிதவிக்கின்றனர். படிப்பைத் தொடர மத்திய, மாநில அரசுகள் அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்காத ஏழை மாணவர்கள் உக்ரைன், ரஷ்யா,சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கின்றனர். அங்கு மருத்துவம் படிக்க எளிதாக ‘சீட்’ கிடைப்பதோடு நம் நாட்டை ஒப்பிடும்போது கல்விக் கட்டணமும் குறைவாக இருப்பதால் அங்கு சென்று படிக்கின்றனர்.

இதில், அதிகபட்சமாக உக்ரைனில்தான் இந்திய மாணவர்கள் அதிகம் மருத்துவம் படிக்கின்றனர். உக்ரைன் மீதான ரஷ்ய போரால் அந்நாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் மத்திய அரசால் சொந்த ஊர் அழைத்துவரப்பட்டனர். இவர்களில் 1,896 மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இம்மாணவர்கள் உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்டபோது, அவர்களின் படிப்பு தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன. ஆனால், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால், தங்கள் எதிர்காலத்தை நினைத்து இந்த மாணவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:

உக்ரைனுக்கு படிக்கச் சென்ற மாணவர்கள் பெரும்பாலானோர் நடுத்தர, ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும்தான் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தோம். உக்ரைனில் மருத்துவம் 6 ஆண்டு படிப்பாகும். இறுதியாண்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்போடு மருத்துவப் பயிற்சியும் மேற்கொண்டுள்ளதால் குறித்த காலத்தில் அவர்கள் படிப்பை முடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், முதலாமாண்டு முதல் ஐந்தாமாண்டு வரை படித்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது.

தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு உக்ரைனில் உள்ளகல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் வகுப்புகளைத் தொடங்கின.தற்போது சில பல்கலைக்கழகங்களைத் தவிர மற்றவை வகுப்புகளை எடுப்பதையே நிறுத்திவிட்டன. இதிலும் சில நிறுவனங்கள் கல்விக் கட்டணம் செலுத்தாதோருக்கு வகுப்புகளை நிறுத்திவிட்டன. பேராசிரியர்கள் பலரும் அந்த நாட்டைவிட்டே வெளியேறிவிட்டனர். அதனால், பேராசிரியர்கள் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புகளை நிறுத்திய பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆன்லைன் வகுப்புகள் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரியவில்லை.

உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வந்தபோது சொந்த நாட்டில் மருத்துவம் படிக்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்பாடு செய்வதாகவும் அல்லது அண்டை நாடுகளில் அதேகல்விக் கட்டணத்தில் படிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதிஅளிக்கப்பட்டது. தற்போது வரைமத்திய அரசும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

எனவே, எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்கள் மருத்துவப் படிப்பைத் தொடர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x