அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதை அடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம்; தீட்சிதர்கள் எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பு

பாதுகாப்புக்காக கனகசபை அருகே குவிக்கப்பட்டிருந்த போலீஸார்.படங்கள்: க.ரமேஷ்
பாதுகாப்புக்காக கனகசபை அருகே குவிக்கப்பட்டிருந்த போலீஸார்.படங்கள்: க.ரமேஷ்
Updated on
1 min read

கடலூர்: தமிழக அரசு அனுமதி அளித்து,அரசாணை வெளியிட்டதை ஒட்டி கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது நின்று பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதைஒட்டி கோயிலைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள கனகசபையில் (சிற்றம்பல மேடை) பக்தர்கள் வழிபட அக்கோயிலின் தீட்சிதர்கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு கனகசபையில் ஏறி வழிபட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் சென்றார். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவரை வழிபட விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர். இந்நிகழ்வு வலைதளங்களில் பரவின. கரோனா பாதுகாப்பு விதிகளின்படி தரிசனத்துக்கு தடை விதிப்பதாக தீட்சிதர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் தீட்சிதர்களின் செயல்பாட்டை கண்டித்தும், பக்தர்கள் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கனகசபை மீது ஏறி வழிபடலாம் என்று அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இதை பொதுமக்களும், பக்தர்களும் வரவேற்றுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பக்தர்கள்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பக்தர்கள்.

தீட்சிதர்கள் எதிர்ப்பு

இதற்கிடையே, சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி அரசாணை குறித்து விவரம் அளிக்க சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை நேற்று அலுவலகத்துக்கு அழைப்புவிடுத்து, கூட்டம் நடத்தினார். இதில் கலந்து கொண்ட தீட்சிதர்கள், “எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது” என்று தெரிவித்தனர். இதற்கிடையே கூட்டத்துக்கு வந்த கூடுதல் ஆட்சியர்ரஞ்ஜீத் சிங், “தமிழக அரசின் அரசாணை கண்டிப்பாக நிறைவேற்றப்படும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை நடராஜர் கோயில் உள்ளேயும், வளாகத்தைச் சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். மாலை 5.15 மணிக்கு, தீட்சிதர்கள் கனகசபையை திறந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வரிசையாக நின்று கனகசபைக்குள் சென்று சுவாமி தரிசனம்செய்து திரும்பினர். இதைத்தொடர்ந்து தெய்வ தமிழ் பேரவையினர், மக்கள் அதிகாரம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிவனடியார்களும் கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in