ஏற்காடு கோடை விழா ஏற்பாடுகள் தீவிரம்; மலர்களால் வடிவமைக்கப்படும் மேட்டூர் அணை: குழந்தைகளை ஈர்க்க ஷின் சான் உருவம்
சேலம்: ஏற்காட்டில் வரும் 26-ம் தேதி தொடங்கும் கோடை விழா மலர் கண்காட்சியின்போது, பார்வையாளர்களைக் கவரும் வகையில் மேட்டூர் அணை, வள்ளுவர் கோட்டம் மற்றும் குழந்தைகளை ஈர்க்க ஷின் சான் கார்ட்டூன் கதாபாத்திரம் உள்ளிட்ட உருவங்கள் மலர்களால் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்பட்டு வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை.
தற்போது, தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், ஏற்காட்டில் வரும் 26-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 நாட்கள் கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோடை விழா தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், கோடை விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய அம்சமான மலர் கண்காட்சிக்காக ஏற்காடு அண்ணா பூங்காவில், மலர் தொட்டிகள், கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பல வண்ண மலர்கள், அலங்கார மலர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், புதுப்பிக்கப் பட்ட கண்ணாடி மாளிகையில் வண்ண மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பயணிகள் மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் மலர்களால் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது: மலர் கண்காட்சியில், சேலம் மாவட்டத்தின் பெருமை மிகு அடையாளமான மேட்டூர் அணை 15 அடி உயரம், 20 அடி அகலத்தில் மலர்களால் வடிவமைக்கப்படுகிறது. மேலும், வள்ளுவர் கோட்டம், அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண சலுகையை நினைவூட்டல், இயற்கை விவசாய விழிப்புணர்வுக்காக காய்கறிகள் நிறைந்த மாட்டுவண்டி மற்றும் குழந்தைகளை ஈர்க்க பிரபல மான ஷின் சான் கார்ட்டூன் கதாபாத்திரம் உள்ளிட்ட 5 உருவங்கள் மலர்களால் வடிவமைக்கப்படுகிறது.மேலும், மலர்களால் ஆன செல்போன் செல்ஃபி போட்டோ பாயின்ட் அமைக்கப்படுகிறது.
இதேபோல, ஏரி பூங்காவில் செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டு வருகிறது. செயற்கை நீரூற்றுகளில் வண்ண விளக்குகளும் பொருத்தப்படுகிறது. பூங்காவில் ஏற்கெனவே பால்செம், ஜீனியா, கிரைசாந்திமம், பெகோனியா, சால்வியா, காஸ்மாஸ், கார்நேசன் உள்ளிட்ட 40 வகையான மலர் செடிகளை உற்பத்தி செய்ய 2 லட்சம் விதைகள், 10,000 மலர் தொட்டிகளில் ஊன்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கண்காட்சிக்காக 5 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
