

தாம்பரம்: சிட்லப்பாக்கம் ஏரியின் மேம்பாட்டுப் பணிகள் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக ஆட்சியில் சிட்லப்பாக்கம் ஏரி மேம்பாட்டுக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வந்த நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த ஓராண்டாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்தும் சிட்லப்பாக்கம் பகுதியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக வடக்கு மாவட்டச் செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாநில மகளிரணி செயலர் பா.வளர்மதி பங்கேற்றார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக வேண்டுமென்றே நிறுத்தியுள்ளது. தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி, பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது சிட்லப்பாக்கம் ஏரி திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பா.தன்சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.