

ராமேசுவரம்: இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி கச்சத்தீவை இந்தியாவுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்குவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதை தாங்கள் எதிர்ப்பதாகவும் மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இலங்கையில் உள்ள மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள் கூட்டமைப்பினர் அலுவல கத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் செயலாளர் என்.எம்.ஆலம் கூறியதாவது:
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையை பயன்படுத்தி கச்சத்தீவை இந்தியாவுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்க முயற்சிகள் நடைபெற்று வரு கின்றன.
கச்சத்தீவை இந்தியாவுக்கு குத்தகைக்கு விட்டால் இலங்கை மீனவர்கள் பெரிய அளவிலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஏற்கெனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்து வருவதால் கடல் வளம் அழிந்து வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவை குத்தகைக்கு விட்டால், எங்களின் தொழில் பாதிக்கப்படுவதோடு, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கும்.
எனவே, கச்சத்தீவை இந்தியாவுக்கு குத்தகைக்கு விடக் கூடாது என்று இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.