

இன்றைய டிஜிட்டல் உலகத்துக்கு ஒரு ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் தேவை என்று கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
‘தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம்’ என்று புகழப்படும் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் கடந்த மார்ச் மாதம் காலமானார். 1,500 படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பு பொறுப்பாளராக (பிஆர்ஓ) பணியாற்றிய அவர், பழைய திரைப் படங்கள் தொடர்பான பல அரிய புகைப்படங்களை பொக்கிஷமாக வைத்திருந்தவர். அவரது படத்திறப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விஷால், இயக்குநர் விக்ரமன், ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனின் மகன் டைமண்ட் பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:
சரியாக பாதுகாக்கவில்லை
பத்திரிகையாளர்களும், திரைப்படத்துறையினரும் அளவு கடந்த மரியாதை வைத்திருந்த மனிதர் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன். எதையுமே மற்றவர்களுக்கு வலிக்காமல் சொல்லக்கூடியவர் அவர். தனது குழந்தைகளுக்கு அடுத்ததாக பெரும் பொக்கிஷமாக அவர் நினைத்தது திரைத்துறை தகவல்களையும், புகைப்படங்களையும்தான். அவற்றையெல்லாம் தேடித் தேடி சேகரித்தார். அவர் அப்படி சேர்த்ததை நாம் சரியாக பாதுகாக்கவில்லை. அதெல்லாம் இன்று எங்கே சென்றது என்றே தெரியவில்லை. அவர் விட்டுச் சென்றதெல்லாம் மிகப்பெரிய பொக்கிஷங்கள். என்னைப் பற்றி அவர் சேகரித்து வைத்திருந்த சம்பவங்கள் இப்போது கிடைக்குமா? என்று தெரியாது. அப்படி ஒவ்வொருவரைப் பற்றியும் அவர் சேகரித்த விஷயங்கள் எல்லாம் எங்கே என்பதும் கேள்விதான். அவற்றையெல்லாம் சேகரிக்க நாம் முயற்சிக்க வேண்டும். இன்றைய டிஜிட்டல் உலகத்துக்கு ஒரு ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தேவை. அவர் விட்டுச்சென்ற அந்த பொறுப்பை அவர் அளவுக்கு பண்புள்ள ஒரு இளைஞர் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
விஷால்
நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் பேசும்போது, “ ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் செய்தது மிகப்பெரிய சேவை. அவரை மறக்கக்கூடாது என்பதற்காகவே நான் என்னுடைய அறக்கட்டளை மூலம் அவரது பெயரில் இரண்டு பெண் குழந்தைகளை படிக்க வைக்க முடிவெடுத்திருக்கிறேன்’’ என்றார்.