Published : 19 May 2022 09:49 PM
Last Updated : 19 May 2022 09:49 PM
மதுரை: "எனது துறை மானியக் கோரிக்கையில் பேசியபோது, பழைய ஓய்வூதியம் வழங்க முடியாது என்று நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரையில் இன்று (வியாழக்கிழமை) மாலை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தமிழக சட்டப்பேரவையில் எனது துறை மானியக்கோரிக்கையின் போது பழைய ஓய்வூதியம் தொடர்பாக பேசினேன். அப்போது ராஜஸ்தான் மாநில அரசு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக புதிய ஓய்வூதியத்திட்ட நிதியை பெறுவதில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து மட்டுமே பேசினேன்.
தமிழக நிதி நிலைமையையோ, பழைய ஓய்வூதியம் வழங்க முடியாது என்றோ நான் ஒருவார்த்தை கூட பேசவில்லை. ஆனால் இங்குள்ள அறிவுஜீவிகள், ‘நிதியமைச்சர் எப்படி பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த முடியாத எனச் சொல்வார்’ என தவறான கருத்துகளை பரப்பி, நான் சொல்லாததை சொல்லியதாக திரித்து பரப்பி விட்டனர்.
தீர்ப்புகள் குறித்து... - மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கும் வரி விதிக்கும் உரிமைகளை ஜிஎஸ்டி கவுன்சில் அதை மீறி நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் கிடையாது. சட்ட அமைப்பின் அடிப்படையில் முடிவெடுத்து மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் பரிசீலனைக்கு அனுப்பலாமே தவிர அந்த முடிவை கட்டாயப்படுத்துவதற்கு உரிமையும் கிடையாது. கடமையும் கிடையாது என சட்ட அமைப்பில் உள்ளதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெளிவாக தீர்ப்பில் சொல்லியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக இரண்டுநாள் தீர்ப்புகளையும் இணைத்து பார்க்க வேண்டும். அந்த தீர்ப்பில் சட்டமன்றத்தின் உரிமை, ஆளுநர், ஜனாதிபதி ஆகியோரின் உரிமைகள் என்னவென்பதை தெளிவாக சொல்லியுள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளை சட்டங்களை நிறுத்திவைக்கவோ, செயல்படுத்தாமல் வைக்கவோ யாருக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது என்பதை தீர்ப்பில் தெளிவாக சொல்லியுள்ளனர். 2014-க்குப் பின்னால் மாநிலங்களின் உரிமைகளை குறைக்கும் வகையில் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் மத்திய அரசு, ஆளுநர், ஜனாதிபதியின் செயலும் இருந்த சூழலில் அடுத்தடுத்த நாட்களில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சட்டமன்றங்களின் உரிமைகளை, சட்ட அமைப்பின் முறைப்படி செல்லும் எனச் சொல்லுவது திருப்புமுனையாக தெரிகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபிறகு கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாநிலங்களின் உரிமைக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுத்து மக்கள் ஆதரவையும் சட்டஅமைப்பின் மீது நம்பிக்கையுடையவர்களை வலுவான கூட்டணியாக அமைத்து நாட்டின் திசையை திருப்பியிருக்கிறார். சாதாரண சூழ்நிலையில் சட்டஅமைப்பு செல்லும் என்ற தீர்ப்பு சொல்லியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் பணமதிப்பிழப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த சட்டத்தின் அடிப்படையில் செல்லாது என அறிவிப்பதற்கு உரிமை இருக்கிறது என பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதில் எந்த விசாரணையும் இல்லை, தீர்ப்பும் இல்லை. மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மாநில உரிமைக்கும் கூட்டாட்சி தத்துவதத்திற்கும் தமிழக முதல்வரின் முயற்சிக்கும் முன்னெடுப்புக்கும் இந்த தீர்ப்புகள் கொண்டாடக்கூடிய நிகழ்வாகும்.
தமிழக சட்டமன்றத்தில் 24-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டு ஆளுநருக்கும், மத்திய, அரசுக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பப்பட்டு கையெழுத்துப்பெறாமல் உள்ளன. இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதம். இதுபோன்ற சூழலில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் எதிர்காலத்தில் நம்பிக்கை அளிக்கும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT