சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மன்னிக்க மாட்டோம்: நாராயணசாமி

நாராயணசாமி | கோப்புப் படம்.
நாராயணசாமி | கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரி: "ராஜீவ் காந்தியை இழந்த நாங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எப்படி ஏற்க முடியும்? சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்தாலும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் என்ற முறையில் மன்னிக்க மாட்டோம்" என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

பேரறிவாளன் விடுதலை குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ''விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை நடந்து 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்து உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதிப்படுத்தியது. தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசிடம், தங்கள் தண்டனையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை காலதாமதம் செய்ததால், உச்ச நீதிமன்றம் இத்தண்டனையை ஆயுள் தண்டனையாக்கியது. அதன்பிறகு விடுதலை செய்யக் கோரினர்.

தொடர்ந்து நாங்கள் பலமுறை, இதில் சொல்லியுள்ளோம். இந்திய அரசின் எதிர்கால விடிவெள்ளியாக திகழ்ந்தவர் ராஜீவ் காந்தி. வெளியுறவு மற்றும் அணுகுண்டு கொள்கையில் திறம்பட செயல்பட்டவர், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இந்திய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். அவரை இழந்துள்ள நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மன்னித்தாலும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் என்ற முறையில் நாங்கள் மன்னிக்க மாட்டோம்." எனறு குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in