Published : 19 May 2022 04:09 PM
Last Updated : 19 May 2022 04:09 PM

துவரம் பருப்பு ரூ.140, உளுந்து ரூ.145, நல்லெண்ணெய் ரூ.340... - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: "வெளிச் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் வரை ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2 கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயிலும், கூடுதலாக சமையல் பொருட்கள் தொகுப்பும் மானிய விலையில் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏழைகளால் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், மக்களின் துயரத்தைக் குறைக்கவும் தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

மக்களின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுத்த உடை, வாழ்வதற்கு இடம் ஆகியவைதான். இந்த மூன்று தேவைகளுக்குமான செலவுகள் கடுமையாக அதிகரித்து விட்டன. குறிப்பாக, உணவுத் தேவைக்கான பொருட்களின் விலைகள் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.140 ஆகவும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பின் விலை ரூ.145 ஆகவும் அதிகரித்துள்ளன. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் விலை ரூ.340 ஆகவும், கடலை எண்ணெய் விலை ரூ.240 ஆகவும், சூரிய காந்தி எண்ணெய் விலை ரூ.220 ஆகவும் உயர்ந்துள்ளன. மற்றொரு புறம் காய்கறிகளின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இன்றைய நிலையில் ஒரு கிலோ தக்காளியின் விலை சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.120 & 130 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தையும் மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விலைவாசி உயர்வை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரமும் உயரவில்லை. கரோனா பரவல் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அவர்களால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. அதனால், ஏழை மக்கள் உணவுத் தேவையை குறுக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்தால் மக்களின் நிலை இன்னும் மோசமாகிவிடும்.

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் போது, அதைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அந்தக் கடமையிலிருந்து மாநில அரசு ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஆனால், தமிழகத்தில் விலைவாசி உயர்வு கடுமையாக உள்ள நிலையில், அதைத் தடுக்க தமிழக அரசின் சார்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேவை அதிகரிப்பு, வரத்துக் குறைவு, பதுக்கல் ஆகியவை தான் விலைவாசி உயர்வுக்கான இயல்பான காரணங்களாக இருக்கக்கூடும். இவற்றில் தேவை அதிகரிக்கவில்லை என்பதை புள்ளி விவரங்கள் மூலம் அறியமுடிகிறது.

மீதமுள்ள வரத்துக் குறைவு, பதுக்கல் ஆகியவற்றில் எது விலைவாசி உயர்வுக்கு காரணம் என்பதைக் கண்டறிந்து அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பதுக்கல் காரணமாக இருந்தால், சோதனைகளை நடத்தி பதுக்கப்பட்ட பொருட்களை வெளிக்கொண்டு வருவதும், வரத்துக் குறைவாக இருந்தால், கிடைக்கும் இடங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பொருட்களை கொள்முதல் செய்து சந்தைகளில் விற்பனை செய்வதும்தான் இதற்கு தீர்வுகள் ஆகும். கடந்த காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்த போது, வெளிச் சந்தையில் அவற்றின் விலையை கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகளிலும், அமுதம், காமதேனு போன்ற கூட்டுறவு அங்காடிகளிலும் மானிய விலையில் அவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கு எதிர்பார்த்த பலனும் கிடைத்திருக்கிறது. அதே முறையை இப்போது அரசு கடைபிடிக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த உளுந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டு விட்டது. உளுந்து விற்பனை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் கூட, அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். வெளிச் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் வரை ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2 கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயிலும், கூடுதலாக சமையல் பொருட்கள் தொகுப்பும் மானிய விலையில் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x