புதுச்சேரியில் ஆயுள் தண்டனைக் காலம் முடிந்த கைதிகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: அதிமுக

புதுச்சேரியில் ஆயுள் தண்டனைக் காலம் முடிந்த கைதிகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: அதிமுக
Updated on
1 min read

புதுச்சேரி: "பேரறிவாளன் தீர்ப்பை புதுவை அரசு முன்னுதாரணமாக எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஆயுள் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க அரசும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: "ராஜீவ் கொலை குற்றவாளிகளை மாநில அரசு விடுதலை செய்யும் என 19.02.2014-ல் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 நபர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என 9.9.2018-ல் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு அதிமுக அரசின் தொடர் சட்டரீதியான நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் இயக்கம் அதிமுக.

தனது விடுதலைக்காக துணைநின்ற அதிமுக முன்னாள் முதல்வர்கள் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை பேரறிவாளன் சந்தித்து நன்றியை தெரிவித்ததே அவரின் விடுதலைக்கு அதிமுகதான் காரணம் என்பதை திமுகவினர் உணர வேண்டும்.

பேரறிவாளன் தீர்ப்பை புதுவை அரசு முன்னுதாரணமாக எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஆயுள் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க அரசும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in