Published : 19 May 2022 12:50 PM
Last Updated : 19 May 2022 12:50 PM

‘ஊதியமின்றி நியமனம்’... மேயர் உதவியாளருக்கு முழு அதிகாரம்: மதுரை மாநகராட்சி தீர்மானத்தால் சர்ச்சை

நீல நிற ஆடை அர்ச்சனா தேவி | அருகில் மதுரை மேயர் இந்திராணி

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் உதவியாளரை சிறப்பு ஆலோசகராக நியமிக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு தனிப்பட்ட உதவியாளராக அர்ச்சனா தேவி உள்ளார். இவர் மேயருடன் அரசு விழா மேடைகளில் அமருவது, ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பது, மேயர் கையோப்பமிடுவதற்கு முன் மாநகராட்சி கோப்புகளை ஆய்வு செய்வது, அவருக்கு ஆலோசனை வழங்குவது என்று அவரது நடவடிக்கை சர்ச்சைக்குள்ளானது.

அர்ச்சனா தேவி இதற்கு முன் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அலுவலகத்தில் பணிபுரிந்தவர் என்பதால் மாநகராட்சியில் அவர் இயல்பாகவே செல்வாக்கு பெற தொடங்கினார். அவரது செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியதால் மாநகராட்சி கூட்டத்தில் அவரை மேயரின் அலுவலகத்தில் அவருக்கு சிறப்பு ஆலோசகராக நியமிக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக கவுன்சிலர்கள் இந்த தீர்மானத்தை நேரடியாக எதிர்க்கவும் முடியாமல் ஆதரிக்கவும் முடியாமல் தவித்தனர். ஆனால், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்காததால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தின் விவரம்: "மேயர் அவரது அலுவலகத்தில் சிறப்பு ஆலோசகர் ஒருவரை நியமனம் செய்ய கேட்டுக் கொண்டுள்ளார். மேயரின் அன்றாட பணிகளுக்கு அவர் உறுதுணையாக இருந்து ஆலோசனைகள் வழங்குதல், மாநகராட்சி கொள்கைகள், செயல்முறை மற்றும் திட்டங்கள் குறித்து மேயருக்கு ஆலோசனை வழங்குவது, ஆய்வு தணிக்கைகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றில் மேயருடன் அவர் பங்கேற்பது, அரசுத் துறை மற்றும் உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களுடன் பணிகள் தொடர்பாக மேயர் தெரிவிக்கும் தகவல்களை வழங்கி தகவல் பரிமாற்றம் செய்ததல் உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார். இதற்காக அவர் ஊதியமோ மாநகராட்சிக்கு செலவினமோ எதுவும் இன்றி அவரை நியமனம் செய்யலாம்.

இந்நியமனத்திற்கு பொருத்தமானவராக அர்ச்சனா தேவி என்பவரை நியமனம் செய்திட மேயரிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரை அடிப்படையில் அவரை இப்பொறுப்பில் ஐந்து ஆண்டுகளோ அல்லது மேயர் பதவிக்காலத்தில் மேயர் விரும்பும் வரை நியமிக்க மாநகராட்சி மன்ற ஒப்புதல் கோருகிறது" என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேயர் தனக்கு உதவியாளர் வைத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அவரை மாநகராட்சி கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மேயருக்கு ஆலோசனை வழங்குவது போன்றவற்றை ஊதியமே பெறாமல் பணிநியமனம் செயயப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே மேயர் இந்திராணி சுதந்திரமாக செயல்படுவதில்லை என்றும், அவருக்கு பின்னால் இருப்பவர்கள் அவரை இயக்குவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது அதை இப்படி வெளிப்படையாக தெரியும்படி, தீர்மானம் நிறைவேற்றி ஏற்கெனவே மேயர் பணிகளில் தலையீடுவதாக சர்ச்சைக்குளான அர்ச்சணாதேவியை மேயருக்கு ஆலோசனை வழங்க பணி நியமனம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சியில் அர்ச்சனா தேவிக்கு வழங்கப்படும் இந்த அதித முக்கியத்துவத்தின் பின்னணியையும், மாநகராட்சி விதிமுறைகளில் மேயர் உதவியாளர் இவ்வாறு செயல்படுவதற்கு இடமிருக்கிறதா என்றும் எதிர்கட்சி கவுன்சிலர்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் கூறும்போது, "மேயருக்கு அவரது சிறப்பு ஆலோசகர் நியமிக்க அதிகாரமிருக்கிறது. அவர் மேயருடன் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்பது பற்றி தகவலை கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கவே மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x