Published : 19 May 2022 11:33 AM
Last Updated : 19 May 2022 11:33 AM

கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை. கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை மற்றும் நீலகரி மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். இதன்படி இன்று காலை கோவை வஉசி மைதானத்தில் 'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்ட தொழில்துறையினர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "

தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரம் என்னவென்று கேட்டீர்களென்றால் அது கோவை மாநகரம் தான். ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு, மோட்டார் பம்புகள், வெட் கிரைண்டர், தங்க நகை மற்றும் ஆபரணக் கற்கள் உற்பத்தி என அனைத்துத் தொழில்களிலும் சிறந்த நகரம் இந்த கோவை நகரம் தான்.

இந்தத் தொழில்தான் என சொல்லாமல், பல்வேறு தொழில்களின் மையமாக இந்தக் கோவை இருக்கிறது. கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை என்ற பெயரை பெற்ற நகரம் இந்தக் கோவை.

கோயம்புத்தூரில் 700-க்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையான வெட் கிரைண்டர்களை தயாரித்து இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறீர்கள். இவற்றுக்கு “கோயம்புத்தூர் வெட் கிரைண்டர்” என புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதே இதன் பெருமைக்கு சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது.

தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையிலும் இந்த மாவட்டம் மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக, இந்த தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மென்பொருள் தயாரிப்பு நகரமாகவும் இந்த கோவை மாநகரம் உருபெற்றுள்ளது. இந்நகரத்தில் உள்ள டைடல் பூங்கா மற்றும் பிற திட்டமிடப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மூலம், உலக அளவில் அவுட்சோர்சிங் நகரங்களில் ஒரு முக்கிய இடத்தை இந்த நகரம் தற்போது பிடித்திருக்கிறது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் நடைபெற்ற நான்கு மாநாடுகளில் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடைபெற்றது. ஏனென்றால், தமிழ்நாட்டின் தொழில் துறையினுடைய மிக முக்கிய தூண்களில் ஒன்று இந்தக் கோவை மாவட்டம் என்பதற்காகத்தான்.

கோவை மாநகரத்தின் வளர்ச்சிக்கு, இந்த மேற்கு மண்டலத்தின் தொழில் முன்னேற்றத்திற்கு, கோவை விமான நிலையத்தின் விரிவாக்கம் அவசியம் தேவை. இதனை உணர்ந்து, இந்த விமான நிலையத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கான பணிகளை நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்தார்.

இந்தப் பணிகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டு, நில எடுப்புப் பணிகள் 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. கடந்த ஆட்சிக் காலத்தின் போது பத்தாண்டு காலமாக சரியான முன்னேற்றம் இல்லாமல் தொய்வடைந்திருந்த அந்தப் பணிகளை இப்போது முடுக்கிவிட்டு, இதற்காக 1,132 கோடி ரூபாயை நாம் ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

இந்தப் பணிகள் மிக விரைவில் முடிக்கப்பட இருக்கிறது. இதன் மூலமாக, சென்னைக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டின் தலைசிறந்த பன்னாட்டு விமான நிலையமாக கோவை விமான நிலையம் உயர்த்தப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இந்த அரசினுடைய லட்சியத்தை அடைய, கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

வளம்மிக்க இந்த மாவட்டத்தை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில், புத்தாக்கம், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான புதிய மையமாக கோயம்புத்தூர் உருவாக்கப்படும்.

இதற்காக தகுந்த ஆலோசகரை நியமித்து, விரிவான திட்டம் ஒன்று தயாரிக்கப்படும். இந்த விரிவான திட்டம், கோவைக்கான புதிய பெருந்திட்டமாக இருக்கக்கூடிய ஒருங்கிணைக்கப்படும். கோவை நகரின் கட்டமைப்புத் தேவைகளுக்கான எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக்கூடிய வகையில், இந்தப் பகுதிக்கான புதிய பெருந்திட்டம் உருவாக்கப்படும்.

ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை செயலாக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் , தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் , தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி, அறிவு சார் ஆராய்ச்சி பூங்கா ஒன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கோயம்புத்தூர் மாவட்டம் சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கரில் 18 கோடியே 13 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் 9 கோடியே 6 இலட்சம் ரூபாய் அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழிற்பேட்டை கொசிமா மூலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, தொழிற்பேட்டை அமைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஏற்றுமதி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட 10 ஏற்றுமதி மையங்களில் 4 மையங்கள் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், மற்றும் கரூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

கயிறு உற்பத்தியில் தமிழ்நாடு, நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. கயிறு உற்பத்தித் தொழிலில், உழவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் வருமானத்தைப் பெருக்கிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் (Geo Textiles) மற்றும் தென்னை நார் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை பிரபலப்படுத்தவும், மாநிலம் முழுவதும் கயிறுத் தொழில் குழுமங்களை மேம்படுத்தவும், தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். இதற்கு, முதற்கட்டமாக ரூபாய் 5 கோடி தொடக்க மூலதனமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் விதமாக மூன்று மண்டல அளவிலான புத்தொழில் மையங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஈரோட்டில், மண்டல புத்தொழில் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் ரூபாய் 3.5 கோடி மதிப்பில் மஞ்சள்தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்கவும், ஈரோடு மாவட்டம், பவானியில் ரூபாய் 3.5 கோடி மதிப்பில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்கவும், திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு பங்களிப்பு ரூபாய் 10 கோடியோடு, 16 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும், கரூர் மாவட்டம் க.பரமத்தி வட்டாரத்தில் 5 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு பங்களிப்புடன் 6 கோடியே 93 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும் ஒரு கயிறு குழும பொது வசதி மையம் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மின்னணு சாதனங்களின் பயன்பாட்டில் உலகம் முழுவதும் மூழ்கியுள்ளது. “சிப்” என்று அழைக்கப்படும் செமி-கண்டக்டர் இல்லாத மைக்ரோ எலக்ட்ரானிக் சாதனமே இல்லை என்றே சொல்லலாம். தகவல்தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகளின் அடிப்படையிலே உலகளவில் அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், செமி-கண்டக்டர்களின் தேவை முன் எப்போதையும் விட அதிகரித்துள்ளது.

உலகளவில் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனங்களும் தங்களது சிப் தேவைக்காக, சீனா, தைவான் போன்ற ஒரு சில நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த சூழலை நன்கு பயன்படுத்தி தமிழ்நாட்டில் சிப் உற்பத்திக்கான முயற்சிகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உங்களது பங்களிப்பினை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

கோவையை முனையமாக வைத்து செயல்படுத்தப்பட்டு வரும் வான்வழி மற்றும் பாதுகாப்புத் தொழில் பெருவழித்திட்டத்தில், வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தியையும் மேற்கொள்ள வேண்டும். சூலூரில் அமைக்கப்பட உள்ள தொழிற்பூங்காவிலும் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x