Published : 19 May 2022 07:34 AM
Last Updated : 19 May 2022 07:34 AM

பேரறிவாளன் விடுதலை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: இந்திய அரசியலமைப்பு மீது மக்களுக்கும், சட்ட நிபுணர்களுக்கும் மிகுந்த நம்பிக்கையை இது உறுதிப்படுத்தும். 7 பேர் விடுதலை விஷயத்தில் உறுதியாக இருந்த தமிழக அரசு, குறிப்பாக முதல்வருக்கும், அவரது அமைச்சரவைக்கும் பாராட்டுகள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளது. பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. அவரைப் போலவே மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்: நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதேபோல, சிறையில் உள்ள மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மத்திய, மாநில அரசுகள், மனிதாபிமானத்துடன் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: அரசியலமைப்பு சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக்கொள்கிறது. நம் ஒற்றுமை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டை சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகிறோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: குரலற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இத்தீர்ப்பை சுட்டிக்காட்டி மற்ற 6 பேரின் விடுதலைக்கான ஆணையை உச்ச நீதிமன்றத்திடம் இருந்து தமிழக அரசு பெற முடியும்.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா: பேரறிவாளன் விடுதலைக்காக அவரது தாய் அற்புதம்மாள் அதிக அளவு முயற்சி எடுத்துள்ளார். அந்த தாயின் கண்ணீரும், நேர்மையும் வீண் போகவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் முத்தரசன்: ஆளுநர் மாளிகையின் நீண்ட கால தாமதத்தையும், முடிவெடுக்காமல் தட்டிக் கழித்து வந்த பொறுப்பற்ற செயலையும் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு மதித்து நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த தமிழக அரசின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் நீண்ட காலமாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: அற்புதம்மாளின் உறுதிமிக்க சட்ட வழியிலான நெடும்போருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து ஜனநாயக சக்திகளின் நல்லாதரவு, தமிழக அரசு வழங்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்: பாதி காலத்தை சிறையிலேயே பேரறிவாளன் கழித்துவிட்ட நிலையில், அவரது தாயார் அற்புதம்மாளின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. நளினி உள்ளிட்ட மற்ற 6 பேரையும் விரைவில் விடுவிக்க வேண்டும்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: ஆயுள் தண்டனையைவிட நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்துள்ளது. வென்றது நீதியும், அற்புதம் அன்னையின் போர்க்குணமும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: அற்புதம்மாள் என்ற தாய், நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நீண்ட காலம் நடத்திய சட்டப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. தனது அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே பேரறிவாளனை விடுவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பேரறிவாளனின் விடுதலை குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்டத்துக்கு உட்பட்ட தீர்ப்பாகவே கருதுகிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மமக தலைவர் ஜவாஹிருல்லா, சமக தலைவர் சரத்குமார், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் விஎம்எஸ் முஸ்தபா, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், மஜக பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா மாநிலத் தலைவர் முகமது சேக் அன்சாரி, முன்னாள் எம்எல்ஏ எம்ஜிகே நிஜாமுதீன் உள்ளிட்டோரும் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x