Published : 19 May 2022 06:37 AM
Last Updated : 19 May 2022 06:37 AM
சென்னை: பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று அறப்போராட்டம் நடத்த காங்கிரஸாருக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகள் 7 பேரை உச்ச நீதிமன்றம்தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்ச நீதிமன்றம், சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
‘நிரபராதிகள் அல்ல’
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரம், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாக கூற விரும்புகிறோம்.
‘கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ என்று சிலர்கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற குரல் ஏன் எழவில்லை. அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா. ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் மட்டும்தான் தமிழர்களா. தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதில அளிக்க வேண்டும்.
காங்கிரஸாரின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் மே19-ம் தேதி (இன்று) காலை 10 முதல் 11 மணி வரை காங்கிரஸ் கட்சியினர் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு, ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு அவரவர் பகுதியில் முக்கியமான இடங்களில் அறப்போராட்டம் நடத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT