Published : 19 May 2022 07:56 AM
Last Updated : 19 May 2022 07:56 AM
தஞ்சாவூர்: குவாட் அமைப்பை பயன்படுத்தி இலங்கை பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு நம் நாட்டின் பாதுகாப்புக்கு வந்திருக்கக் கூடிய அபாயத்தை தடுப்பதுடன் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று நடைபெற்ற தமிழின படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. சிறையிலுள்ள மீதமுள்ள 6 பேருக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும். காவிரி, முல்லைபெரியாறு, இந்தி திணிப்பு என தமிழர்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும், கட்சி வேறுபாடு இல்லாமல், தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
இலங்கையில், சீனா ஆழமாக கால் ஊன்றிஉள்ளது. இது நம் நாட்டுக்கு மட்டுமல்ல, தெற்காசிய நாடுகள் அனைத்துக்கும் ஆபத்தானது. இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் பெற்று விடக்கூடாது என்பதற்காகத்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் அமைத்த குவாட் அமைப்பில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, பிரதமர் மோடி, குவாட் மூலமாக இலங்கை இனப்பிரச்சினையில் தலையிட்டு, இந்தியாவின் பாதுகாப்புக்கு வந்திருக்கக் கூடிய அபாயத்தை தடுப்பதுடன், தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குஉள்ள தமிழர் பிரச்சினையில்தான் இந்தியாவின் பாதுகாப்பு அடங்கி இருக்கிறது என்பதை டெல்லியில் உள்ளவர்கள் உணர வேண்டும் என்றார்.
பதில் சொல்ல விரும்பவில்லை
பின்னர், ‘‘சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவேந்தல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடியை நீங்கள் ராஜதந்திரம் மிக்கவர் என புகழ்ந்து பேசி இருக்கிறீர்களே?’’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘நான் சொல்லாததை எல்லாம், சொன்னதாக சொல்லாதீர்கள். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல விரும்ப வில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT