Published : 19 May 2022 06:37 AM
Last Updated : 19 May 2022 06:37 AM

ஈரோட்டில் தொடர் மழையால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்புகிறது: வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்மழை காரணமாக ஈரோடு குரங்கன்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. வரட்டுப்பள்ளம் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் நிரம்பிக் காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் குரங்கன் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோயில்பாளையம் அருகே உள்ள தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் மூழ்கியது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்மழை காரணமாக, அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் நீர்மட்டம் 31.85 அடியாக உள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அணை முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உபரி நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாளவாடி, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், வனப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் கும்டாபுரம் தரைப்பாலம் மூழ்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில் 32 மிமீ மழை பதிவானது.

ஈரோடு மாவட்ட மழை நிலவரம் (மீ.மீ): கொடுமுடி - 32, அம்மாபேட்டை - 24.8, மொடக்குறிச்சி - 21, சத்தியமங்கலம் 19, கொடிவேரி - 15, ஈரோடு, பவானி, தாளவாடி பவானிசாகர் - 5.8 மிமீ மழை பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x