தொடர் மழையால் மண் சரிவு; ஏக்கல்நத்தம் மலைக் கிராமத்துக்குச் செல்லும் சாலை துண்டிப்பு

ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: தொடர் மழையால் தார் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ஏக்கல்நத்தம் மலைக் கிராமத்துக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதி நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமம் ஏக்கல்நத்தம். இக்கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று ரூ. 2.50 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டது. குறிப்பாக சாலையின் மலையேற்ற பகுதிகளில் மழைநீர் சாலைகளை அரிக்காத வண்ணம் 254 மீட்டர் தூரத்திற்கு சிமென்ட் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த 13 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் தொடர் மழையால், ஏக்கல்நத்தம் மலைக் கிராமத்துக்குச் செல்லும் சாலையின் மலைப் பகுதியில் தார் சாலை அரித்தும், சிமென்ட் தடுப்புச் சுவர் சரிந்தும் உள்ளது. இதேபோல் மலையில் இருந்து வரும் மழைநீர் கீழே உள்ள சிறு தடுப்பணைகளில் நிரம்பி, 3 இடங்களில் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் கிராமத்துக்கு இருசக்கர வாகனங்களில் செல் வோர், நடந்து செல்பவர்கள் சிரமத்துடன் சென்றுவரும் நிலை உள்ளது.

இதுதொடர்பாக அங்கு வசிக்கும் மக்கள் கூறும்போது, கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போதே சிமென்ட் சுவரில் விரிசல் விழுந்தது. தற்போது தொடர்ந்து பெய்த கனமழையால், மழைநீர் சாலையை அரித்துள்ளது., சிமென்ட் சுவரின் ஒரு பகுதி முற்றிலும் சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில், அங்கே தடுப்பு கட்டியுள்ளோம்.

இதே போல் தடுப்பணைகள் நிரம்பி, சாலையில் 3 இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதை நாங்கள் சிரமத்துடன் கடந்து சென்று வருகிறோம். நாங்கள் 50 ஆண்டுகள் போராடி பெற்ற தார்சாலை ஒரு ஆண்டுக்குள் மண் சரிவினாலும், குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், தொடர்புடைய அலுவலர்கள் எங்களது மலைக் கிராமத்துக்குச் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க உயர்மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in