Published : 19 May 2022 07:16 AM
Last Updated : 19 May 2022 07:16 AM
மாடம்பாக்கம்: தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில், மருத்துவமனை அமைப்பதற்காக சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, மாநகராட்சிமேயர், துணை மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் அழகப்ப செட்டியார் என்பவர்சுமார் 33 ஏக்கர் நிலத்தை சென்னைமாநகராட்சிக்கு தானமாக வழங்கினார். அந்த இடத்தை, மருத்துவமனை கட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர் தானப் பத்திரத்தில் தெளிவாக தெரிவித்துள்ளார். உரிய பராமரிப்பின்றி கிடக்கும், அந்த இடத்தை மீட்டு, புறநகர் மக்கள் வசதிக்காக, மருத்துவமனை அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.
தற்போது மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன், சென்னை மேயராக இருந்தபோது இந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்தார். மருத்துவக் கல்லூரியும் தொடங்க இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். பின்னர், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மேயராகப் பதவியேற்ற சைதை துரைசாமி, அழகப்ப செட்டியார் தொழுநோய் மருத்துவமனை கட்ட இடம் ஒதுக்கீடு செய்தார். எனவே, தொழுநோய் மருத்துவமனை கட்ட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி தற்காலிகமாக சிறிய அளவில் தொழுநோய் மருத்துவமனை கட்டப்பட்டது.
இந்நிலையில், அந்த இடத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேற்று ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது மேயர் பிரியா கூறியதாவது: சம்பந்தப்பட்ட இடத்தில் மருத்துவமனை அல்லது சுகாதாரம் சார்ந்து, வேறு எந்தவிதமான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பது பற்றி அமைச்சருடன் கலந்தாலோசிக்க உள்ளோம். அதன்பின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT