Published : 20 May 2016 09:04 AM
Last Updated : 20 May 2016 09:04 AM

போயஸ் கார்டனில் அதிமுகவினர் கொண்டாட்டம்

தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அக்கட்சியினர் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அருகே பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகமும் உற்சாக கொண்டாட்டத்தால் களைகட்டியிருந்தது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டன. தேர்தல் முடிவு அறிவிக்கும் முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் சற்று வெறிச்சோடி காணப்பட்டது. அங்கிருந்த தொண்டர்கள் சிலர் பதற்றத்துடனும் பரபரப்பாகவும் காணப்பட்டனர். தபால் வாக்குகளில் திமுக முன்னிலை என்றதும் சோர்வாக இருந்தனர். அதையடுத்து முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக முன்னிலை என்று அறிவிப்பு வெளியானதும் அதிமுகவினர் உற்சாகமடைந்தனர்.

அடுத்த அடுத்த சுற்றுகளிலும் அதிமுகவே தொடர்ந்து முன்னிலை என்று அறிவிக்கப்பட்டதால் போயஸ் தோட்டத்தை நோக்கி அதிமுகவினர் படையெடுக்கத் தொடங்கினர். பகல் 11 மணியளவில் திமுகவைவிட அதிமுக 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை என்று அறிவிப்பு வெளியானதும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் குவிந்தனர். ஏறக்குறைய வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் கட்சித் தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடத் தொடங்கினர்.

மேளதாளம் முழங்க ஆடிப் பாடியதுடன், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். அங்கேயுள்ள விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனையும் நிறைவேற்றினர். ஆட்டம், பாட்டம் என போயஸ் தோட்டம் அமர்க்களப்பட்டது. வாணவேடிக்கை, பட்டாசுகள் தொடர்ந்து வெடிக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க மலர்கொத்துடன் வந்தனர். பிற்பகலில் முதல்வரை சந்தித்து அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் முடிவு வெளியாவதை ஒட்டி நேற்று காலை 6 மணிக்கே அதிமுக நிர்வாகிகளும், தொண்டர் களும் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவியத் தொடங்கினர். தொண்டர்கள் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதியாக பெரிய அளவிலான எல்இடி திரை வைக்கப்பட்டிருந்தது. முதல் சுற்றில் அதிமுக முன்னிலை என்று அறிவித்தவுடன் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் அதிமுக முன்னிலை என்று அறிவிப்பு வெளியாகும் போதெல்லாம் தொண்டர்கள்

‘அம்மா.. அம்மா..’ என்று உரக்க கோஷமிட்டனர். தொடர்ந்து தொண்டர்கள் குவிந்ததாலும், பட்டாசுகள் வெடித்ததாலும் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x