Published : 19 May 2022 06:18 AM
Last Updated : 19 May 2022 06:18 AM

இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய முடியாததால் விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் வத்தல் தேக்கம்

விளாத்திகுளம், புதூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகாய் வத்தல் பயிரிடப்படுகிறது. நீளச் சம்பா மிளகாயைவிட முண்டு மிளகாய் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு சுமார் 3 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். இலங்கையில் முண்டு வத்தலுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனவே, இங்கிருந்து இலங்கைக்கு முண்டு வத்தல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தாண்டு அதிக மழைப்பொழிவு காரணமாக முண்டு வத்தல் விளைச்சல் குறைவாக இருந்தது. ஆனால், தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு குவிண்டால் ரூ.30 ஆயிரம் வரை விலை இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல விலை குறைந்து ஒரு குவிண்டால் ரூ.20 ஆயிரத்துக்கு விலைபோகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக முண்டு வத்தல் ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், விளாத்திகுளம், புதூர் பகுதியில் மகசூல் செய்யப்பட்ட சுமார் 200 மூட்டை முண்டு வத்தல் கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிங்கிலிபட்டியைச் சேர்ந்த விவசாயி கே.செல்வகுமார் கூறும்போது, “கடந்தாண்டை போலவே இந்தாண்டு அதிகளவு மழை பெய்து, வத்தல் மகசூலை பாதித்துவிட்டது. ஆனால், கடந்தாண்டை போல் இல்லாமல் இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு குவிண்டால் ரூ.30 ஆயிரம் வரை விலைபோனது. அதன் பின்னர் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்துவத்தல் வருகை காரணமாக உள்ளூர் வத்தலின் விலை ஒரு குவிண்டால் ரூ.20 ஆயிரம் என குறைந்துவிட்டது.

எங்களுக்கு எப்போதும் கைகொடுப்பது ஏற்றுமதி தான். இலங்கையில் சூழ்நிலை சரியில்லாததால் ஏற்றுமதி இல்லை. இங்கும் விலை கிடைக்கவில்லை. இதனால் சூரங்குடி, தூத்துக்குடியில் உள்ள தனியார் கிட்டங்கிகளில் சுமார் 200 மூட்டைகளில் முண்டு வத்தல் இருப்பு வைத்துள்ளோம். ஒரு மூட்டையில் 19 கிலோ வரை இருக்கும். ஒரு கிலோ ரூ.4 ஆயிரம் என்றால், சுமார் ரூ.80 கோடி வரை முண்டு வத்தல் விற்பனையாகாமல் தேங்கி உள்ளது. ஏற்கெனவே, விவசாயத்துக்கு செலவு செய்த நிலையில், தற்போது முண்டு வத்தலை பாதுகாக்கவும் செலவு செய்து வருகிறோம். இதனால் செலவு இருமடங்காக உயர்ந்துள்ளது. விளாத்திகுளம், புதூர் பகுதிகளில் அரசு சார்பில் குளிர்சாதன வசதியுடன் கூடிய கிட்டங்கிகள் அமைத்து தர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x