

கோவில்பட்டி: கோவில்பட்டியைச் சேர்ந்த பல் மருத்துவர் தாயப்பா அ.கார்த்திகேயன். இவரதுமனைவி கோப்பெருந்தேவி என்ற சு.ஜெயந்தி. இவர் கீழஈரால் தொன் போஸ்கோ கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர்களது மூத்தமகன் ராஜவேல். இவருக்கும் ஜமீன்தேவர்குளத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகள் சி.ஜோதிலட்சுமிக்கும் மே 25-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமண அழைப்பிதழை, ஜெயந்தி எழுதிய திருக்குறள் உரை புத்தகத்தின் முகப்பு பக்கத்தில்அச்சிட்டு வழங்கி வருகின்றனர். இப்புத்தகத்தை தமிழ்த் தாய் வாழ்த்து அச்சிட்ட மஞ்சள் பையில் வைத்து, அதனுடன் சில்லுக் கருப்பட்டி வழங்கி திருமணத்துக்கு அழைக்கின்றனர்.
பேராசிரியர் ஜெயந்தி கூறும்போது, “திருமண மேடையை முளைப்பாரி வைத்துஅலங்கரித்து, மேடையில் திருவள்ளுவர் படம் அல்லது சிலை அமைப்பது என முடிவெடுத்துள்ளோம். திருக்குறள் புத்தகத்தில் திருமண பத்திரிகையை அச்சிடலாம் என, எனது கணவர் தெரிவித்தார். மற்றவர்கள் எழுதிய திருக்குறள் உரையில், திருமண பத்திரிகை அச்சிடுவதை விட, நானே திருக்குறளுக்கு உரை எழுதி புத்தகம் தயாரித்தேன். அதன் முதல் பக்கத்தில் திருமண பத்திரிகையை அச்சிட்டோம்.
ரூ.250 மதிப்பில் தயாரித்துள்ள திருக்குறள் புத்தகத்தில் திருமண பத்திரிகை இருப்பதால், இது என்றென்றும் புத்தகஅலமாரியை அலங்கரிக்கும். இன்னும்50 ஆண்டுகளுக்கு பின்னர் கூட இந்த புத்தகத்தை எடுத்து படிக்கலாம். திருக்குறள் புத்தகத்திலான பத்திரிகையுடன் மஞ்சள் பையும், அதனுடன் சில்லு கருப்பட்டியும் வழங்குகிறோம். மஞ்சள் பையில் தமிழ்த்தாய் வாழ்த்து அச்சிட்டுள்ளோம். பிளாஸ்டிக் ஒழிப்பு, பனை தொழிலாளர்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வகையில் இம்முறையை பின்பற்றுகிறோம்” என்றார்.