மதுவிலக்கு கொள்கையில் திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை: ஜெயலலிதா குற்றச்சாட்டு

மதுவிலக்கு கொள்கையில் திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை: ஜெயலலிதா குற்றச்சாட்டு
Updated on
2 min read

மதுவிலக்கு கொள்கையில் திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை. வாக்குகளுக்காகவே திமுக மதுவிலக்கு திட்டம் பற்றி பேசுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளாருமான ஜெயலலிதா கொங்கு மாவட்ட வேட்பாளர்களையும், கேரள மாநிலத்தில் போட்டியிடும் 7 அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''2011 தேர்தல் அறிக்கையில் 54 தலைப்புகளில் அளிக்கப்பட்ட நூற்றுக்கும் மேலான வாக்குறுதிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொன்னதைச் செய்தேன். சொல்லாத பலவற்றையும் செய்திருக்கிறேன்.

மக்கள் எதிர்பார்க்காத, நினைத்துப் பார்க்காத பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா விதைகள், மருந்தகங்கள் அம்மா திட்டம், அம்மா சேவை மையம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம் பல திட்டங்கள் செயல்படுத்தி உள்ளேன்.

2006-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை பெரும்பாலும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் மண்டல தாவரவியல் வாரியம், தேசிய அளவிலான தாவரவியல் பயிற்சி மையம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிய விவசாயிகள் இயற்கை மரணம் அடைந்தால் அவர்கள் கடன் அசலும், வட்டியுமாக தள்ளுபடி செய்யப்படும் என்பது நிறைவேற்றப்படவில்லை.

சூரிய ஒளி மூலம் வீட்டு விளக்குகள்,தெருவிளக்குகள் அமைக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. நிலத்தடியில் மின்சாரக் கம்பிகள் அமைக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் ஆதி திராவிட மாணவர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கட்டணம் வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. தனக்கும் தன் குடும்பத்துக்கும் பயன் தராத வாக்குறுதியை கருணாநிதி நிறைவேற்றமாட்டார்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இந்த ஜெயலலிதா தான்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்றுதான் பொருள். நிலக்கரி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என பல ஊழல்களில் மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி இது.

ஊழல் ஆட்சியையே திமுகவும், காங்கிரஸும் மத்தியிலும், மாநிலத்திலும் நடத்தி வந்தனர். ஆமால், உத்தமர் போல் பேசுகிறார் கருணாநிதி. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிதான். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று பட்டம் பெற்றவர் கருணாநிதி.

ஊழல் என்றாலே கருணாநிதி. கருணாநிதி என்றாலே ஊழல் என்ற அளவுக்கு ஊழலுடன் பின்னிப் பிணைந்த கருணாநிதி ஊழலற்ற ஆட்சி வழங்குவாரா? இதை கேட்பவர்கள் என்ன ஏமாளிகளா? திமுகவினர் வாக்கு சேகரிக்க வந்தால் அவர்களின் ஊழல்களை எடுத்துச் சொல்லி விரட்டி அடியுங்கள்.

எனது தலைமையிலான அரசு தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றி இருக்கிறது. இன்று மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக எதுவுமே செய்யவில்லை என்று திமுகவினர் சொன்னால், மீண்டும் மின்வெட்டில் அவதிப்படவா உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு அவர்களை துரத்தி அடியுங்கள்.

தொழிற்சாலைகள் எண்ணிக்கை, பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டது ஆகியவற்றில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

ஆனால், திமுக ஆட்சியில்தான் தொழில் வளர்ச்சி இருந்ததாக சொல்கின்றனர். 10 மணி நேர மின்வெட்டில் எப்படி தொழில் வளர்ச்சி அடைய முடியும்? கருணாநிதி அவரது குடும்பத் தொழில் வளர்ச்சியைத்தான் சொல்கிறார். தனிப்பட்ட குடும்பத்துக்கு ஏற்படும் வளர்ச்சி தொழில் வளர்ச்சி ஆகாது.

அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன். அதிமுக வரும் சட்டப் பேரவை தேர்தலில் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.

மதுவிலக்கு கொள்கையில் திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை. வாக்குகளுக்காகவே திமுக மதுவிலக்கு திட்டம் பற்றி பேசுகிறது.

மக்களால் நான். மக்களுக்காக நான். மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது தான் என் தவ வாழ்வு.என் ஆட்சி மக்களுக்கு வசந்தத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த வசந்தம் தொடர சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்'' என்று ஜெயலலிதா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in