Published : 19 May 2022 06:02 AM
Last Updated : 19 May 2022 06:02 AM

திருப்பத்தூர் | 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதச்சென்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

சந்துரு. (கோப்புப்படம்)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 10-ம் வகுப்பு ஆங்கில மொழி தேர்வு எழுதச் சென்ற மாணவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் சந்துரு(15). இவர், திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், 10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு நேற்று நடைபெறுவதையொட்டி, தேர்வு எழுத மாணவர் சந்துரு, தனது வீட்டில் இருந்து தேர்வு மையமான மட்றப்பள்ளி அரசுப் பள்ளிக்கு தனது நண்பர் கிருஷ்ணகிரி மாவட்டம் மகனூர்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் மகன் பரத்(16) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் நேற்று சென்றார். விஷமங்கலம் நாகராஜன் பட்டி அருகே சென்ற போது, முன்னால் சென்ற கல்லுாரி பேருந்தை முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மீது சந்துரு சென்ற இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சம்பவ இடத்திலேயே மாணவர் சந்துரு பரிதாபமாக உயிரிழந் தார். உடன் வந்த நண்பர் பரத் படுகாயமடைந்தார். உடனே, அங்கிருந்த பொதுமக்கள் பரத் மற்றும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த சிம்மனபுதுார் காமராஜர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன்(45) ஆகிய இருவரையும் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். விபத்தில் உயிரிழந்த சந்துருவின் உடலை மீட்டு பிரேப்த பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு எழுதச்சென்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x