Published : 19 May 2022 06:00 AM
Last Updated : 19 May 2022 06:00 AM

ஜவ்வாதுமலையில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் செண்பகத்தோப்பு அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர கிராமங்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை

செண்பகத்தோப்பு அணையில் இருந்து 2 மதகுகள் வழியாக 250 கன அடி அளவுக்கு தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.

ஆரணி: ஜவ்வாது மலைத்தொடரில் பெய்த கனமழை காரணமாக செண்பகத் தோப்பு அணைக்கு 500 கன அடி அளவுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து 2 மதகுகள் வழியாக நேற்று 250 கன அடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத் தில் ஜவ்வாது மலைத் தொடர் மற்றும் செங்கம் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் பரவலான கன மழை பெய்தது. இதில், ஜமுனாமரத்தூரில் மட்டும் நேற்று காலை நிலவரப்படி 10 செ.மீ மழையும், செங்கத்தில் 1.8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன. ஜவ்வாது மலைத் தொடரில் பெய்த கனமழை காரணமாக நாகநதி மற்றும் கமண்டல நதிக்கு அதிகப் படியான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

ஜவ்வாதுமலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு அணைக்கு 500 கன அடி வீதம் நீர்வரத்து இருக்கிறது. 62.32 அடி உயரமுள்ள அணையில் மொத்தம் 287.200 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 56 அடி அளவுக்கு மட்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையில் இருந்து முதற் கட்டமாக சுமார் 250 கன அடி அளவுக்கு தண்ணீரை நேற்று காலை திறந்தனர்.

அணை திறக்கப்படுவதை முன்னிட்டு செண்பகத்தோப்பு அணையின் கரையோர பகுதி களில் மற்றும் ஆற்றின் கரை யோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும் ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் என்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டனர்.

அணையின் 4 மற்றும் 5-வது மதகுகள் வழியாக நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் 32 கிராமங்களைச் சேர்ந்த 48 ஏரிகள் பயன்பெறும் என கூறப்படுகிறது. தேவை ஏற்பட்டால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீரை திறக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆரணி ஆற்றில் வெள்ளம்

கண்ணமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் ஜவ்வாது மலைத் தொடரில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அமிர்தி வழியாக நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், கமண்டல நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளதால் ஆரணி குன்னத்தூர் கீழ்நகர் பகுதியில் உள்ள குண்டம் தடுப்பணையை கடந்து வெள்ள நீர் செல்கிறது. கோடைகாலத்தில் கமண்டல நாகநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜவ்வாது மலை அடுத்த பீமன் நீர்விழ்ச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x