Last Updated : 18 May, 2022 11:05 PM

 

Published : 18 May 2022 11:05 PM
Last Updated : 18 May 2022 11:05 PM

நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் - மத்திய நிதியமைச்சரிடம் நேரில் வலியுறுத்திய தமிழக எம்.பிக்கள்

புதுடெல்லி: பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கனிமொழி தலைமையில் எம்பிக்கள் குழு இன்று மத்திய நிதியமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உட்பட தமிழக எம்.பிக்கள் நால்வர் உடன் இருந்தனர்.

சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, திமுக மக்களவை அவைக்குழு துணைத் தலைவரான கனிமொழி: கரூரிலும், திருப்பூரிலும் பின்னலாடை தொழில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளித் தொழில் என்பது விவசாயத்திற்கு அடுத்து அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் முக்கியமான தொழிலாகும். இதில் தற்போது பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொழிலதிபர்களும் தொழிற்சாலைகளை மூடிவிடும் நிலையில் உள்ளதை எடுத்துக்கூற நாங்கள் டெல்லி வந்துள்ளோம். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், பிரதமர், மத்திய நிதியமைச்சர், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதையும் அவர்களிடம் நேரில் சந்தித்து எடுத்துகூறி மனு அளிக்க வந்துள்ளோம். சந்திப்பின்போது, பருத்தி நூல் விலை உயர்வை கண்டித்து சமீபத்தில் நடத்தப்பட்ட முழு வேலை நிறுத்தம் குறித்து எடுத்துக் கூறினோம்.

’கேஷ் கிரிடிட்’ முறைக்கு தற்போது 3 மாதம் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இதை எட்டு மாதங்களாக நீட்டித்தால் தொழில்முனைவோருக்கு மிகப்பெரிய அளவிலான உதவியாக இருக்கும் என்பதையும் எடுத்துரைக்க முதல்வர் கூறி இருந்தார். இதேபோல், இந்த தொழிலுக்காக வங்கிகளின் விளிம்புத்தொகை சதவிகிதத்தையும் குறைக்கக் கேட்டதையும் பரிசீலிப்பதாகக் அமைச்சர் தெரிவித்துள்ளார். இறக்குமதி வரியை வரும் செப்டம்பர் வரை இல்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இதை செப்டம்பர் வரை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் அனைவருக்கும் அளிக்க வேண்டும் எனும் முதல்வரின் கோரிக்கையையும் எடுத்துரைத்தோம். இதையும் தாம் செய்ய இருப்பதாக உறுதியையும் அமைச்சர் அளித்துள்ளார்" என்று விவரித்தார்..

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கனிமொழி, பருத்திக்கான ஏற்றுமதியை தடை செய்து, உள்நாட்டிலேயே அதன் விநியோகத்தை அதிகரிக்கவும் அமைச்சரிடம் கோரியிருப்பதாகவும் பதிலளித்தார். இதன் மீதான ஆலோசனைக்கு பின் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக கனிமொழி தெரிவித்தார்.

கனிமொழியுடன் திமுகவின் மக்களவை எம்பிக்களில் நாமக்கல் எம்பி சின்ராசு, திண்டுக்கல் எம்பி சண்முகசுந்தரம், சேலம் எம்பி ஆர்.பார்த்திபன் மற்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த எம்.பிக்கள் அனைவரும் டெல்லியில் தங்கி அடுத்து வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்திக்க உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x