Published : 18 May 2022 05:58 PM
Last Updated : 18 May 2022 05:58 PM

பலத்த பாதுகாப்புடன் மதுரை மாநகராட்சிக் கூட்டம்: மேயரை செல்லவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடந்த மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பேச வாய்ப்பு கொடுக்காததால் திமுக கவுன்சிலர்கள் மேயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த வாரம் நடந்த மதுரை மாநகராட்சி கூட்டம் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம், மேயர் கணவர் ஆதரவாளர்கள், செய்தியாளர்கள் மீது தாக்குதல் போன்ற ரகளையால் விவாதமில்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் முடிந்தது. அதனால், இன்று மீண்டும் மாநகராட்சி கூட்டம் உதவி ஆணையர் மேற்பார்வையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 40 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 25 போலீஸார் காவலர் சீருடை அணியாமல் மாநகராட்சி அவை காவலர் சீருடை அணிந்து மாநகராட்சி கூட்டரங்கில் பிரச்சினை ஏற்பட்டால் அவைக்குள் செல்வதற்காக வெளியே தயாராக நின்றிருந்தனர்.

மேயர் இந்திராணி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு மண்டலத் தலைவர் வாசுகி: “கிழக்கு மண்டலத்தில் பெரும்பாலான வார்டுகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்து கிராமங்கள். தற்போது வரை மாநகராட்சி இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. ஏற்கெனவே இப்பகுதி வார்டுகளில் சாலை படுமோசம். தற்போது பாதாளசாக்கடை பணிக்காக சாலைகளை தோண்டிப்போட்டு மழைக்காலத்தில் சாலைகள் சேறும், சகதியுமாகி மக்கள் நடக்க கூட முடியவில்லை. விரைவாக பாதாளசாக்கடைப்பணிகளை முடித்து புதிய சாலைகளை போட வேண்டும்” என்றார்.

வடக்கு மண்டலத் தலைவர் சரவண புவனேஷ்வரி: “தல்லாக்குளம் கோயில் முன் மாநகராட்சிக்கு சொந்தமான பொட்டல் காலியிடம் தற்போது தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. கடைகளும் அனுமதியில்லாமல் உள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி மீட்டு அதில் வருமானம் வரக்கூடிய வகையில் வணிக வளாகமோ அல்லது வேறு பயன்பாட்டிற்கோ பயன்படுத்தலாம்” என்றார்.

கவுன்சிலர் பானுமுபாரக் மந்திரி: திருமலை நாயக்கர் மகாலை சுற்றி குப்பை தொட்டிகளை வைத்து அதன் அழகு பாழாக்கப்பட்டுள்ளது. ‘தமிழ் இந்து’ நாளிதழலில் இதுகுறித்து செய்தி வந்துள்ளது. ஆனாலும், தற்போது வரை குப்பை தொட்டிகள் தொடர்ந்து வைக்கப்படுகிறது. மாசாத்தியார் மாநகராட்சிப்பள்ளியில் ஆசியர்கள் பற்றாக்குறை உள்ளது. மகால் அருகே உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் மருத்துவமனை, ஸ்கேன் சென்டர் அமைக்க வேண்டும்” என்றார்.

மண்டலத்தலைவர் முகேஷ்சர்மா: “மாநகராட்சி சொத்து பட்டியலை கொடுங்கள். வார்டுகளில் உள்ள மாநகராட்சி சொத்துகளை தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவை எவை என்று கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

திமுக கவுன்சிலர் ரவிச்சந்திரன்: “மதுரையில் பசுமலை புகழ்பெற்ற பழமையான இடமாக உள்ளது. பிரிட்டிஷாரே ஆரம்பத்தில் இங்குதான் பள்ளி, கல்லூரிகளை கட்டினர். இப்பகுதியில் புதுசு புதுசாக யார் யாரோ ஒவ்வொரு பகுதிக்கு சம்பந்தமே இல்லாத பெயர்களை சூட்டி பசுமலை அடையாளத்தை அழிக்கப்பார்க்கின்றனர்” என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன்: “ மாநகராட்சி அரசிதழில் வார்டின் எண்கள் பதிவாகியிருக்கிறது. மாநகராட்சி எந்த பகுதிக்கும் புதிதாக பெயர் சூட்டவில்லை” என்றார்.

எதிர்க்கட்சி குழுத் தலைவர் சோலைராஜா(அதிமுக): அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காக முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தாமதப்படுத்தி அந்த திட்டத்தை முடக்க நினைப்பதாக சந்தேகம் அடைந்துள்ளோம். அந்த திட்டம் எப்போது நிறைவடையும். கவுன்சிலர்களுக்கு அதிமுக ஆட்சியில் சிறப்பு நிதியாக ஒரு வார்டுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது விலைவாசி எவ்வளவோ உயர்ந்துவிட்டது. தற்போது ரூ.10 லட்சம் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் குறைத்து ரூ.3 லட்சம் வழங்குகிறீர்கள். மக்கள் அன்றாடம் கூறும் அடிப்படைப்பணிகளை வார்டில் எப்படி நிறைவேற்றுவது..” என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன்: "இந்த திட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வறு துறை அனுமதி வாங்கப்படாமலே இருந்தது. தற்போது அனுமதி வாங்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. 12 ஆண்டாக ஊழியர்கள், ஒப்பந்ததார்களுக்கு சரியாக பணம் வழங்காமல் மாநகராட்சி ரூ. 830 கோடிக்கு மேல் கடனில் இருக்கிறது. பணியாளர்களுக்கு 17ம் ஆண்டு வரை பணபலன்களை வழங்கிவிட்டோம். பணிகளை முடிக்கும் ஒப்பந்ததார்களுக்கு பணம் கொடுத்தால்தான் அடுத்தப்பணிகளை செய்வார்கள். நிதி ஆதாரம் பெருகியதும் கவுன்சிலர்களுக்கு சிறப்பு நிதி ரூ.5 லட்சம் வழங்கப்படும்."

கூட்டத்தில், மண்டலத்தலைவர்கள், முக்கிய கட்சி கவுன்சிலர்களுக்கு மட்டுமே இன்று மேயர் பேச வாய்ப்பு கொடுத்தார். அவர்களும் அதிக நேரம் எடுத்து கொண்டதால் பெரும்பாலான திமுக கவுன்சிலர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. கூட்டம் முடிந்ததாக மேயர் இந்திராணி அறிவித்ததும், அதிருப்தியடைந்த திமுக கவுன்சிலர் ஜெயராமன், "நான் நீங்கள் பேச வாய்ப்பு கொடுத்த கவுன்சிலர்களுக்கு முன்பே மனு வழங்கியிருந்தேன். அப்படியிருக்க நீங்க அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்கிறீர்கள், எனக்கு வாய்ப்பு தரவில்லை” என்றார்.

அவரை தொடர்ந்து மற்ற திமுக கவுன்சிலர்களும் மேயரிடம் வாக்குவாதம் செய்ததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேயர் பதில் அளிக்காமல் செல்ல முயன்றபோது திமுக கவுன்சிலர் ஜெயராமன் நான் சொல்வதற்கு பதில் சொல்லிவிட்டு போங்கள் என்று கூறினார். மேயர் தர்மசங்கடத்திற்கு ஆளானார். உடனே மற்றொரு திமுக கவுன்சிலர் ஜெயராஜ், அமைதியாக இருங்கள் என்று கூறவே அதிருப்தியடைந்த ஜெயராமன், உங்களிடம் யார் கேட்டா? வார்டு பிரச்சனையை பற்றி பேச வேண்டாமா? என்று கோபமடைந்தார். மேயர் புறப்பட்டு சென்றதும் அவரை பின்தொடர்ந்து சென்று அவரது அலுவலகத்தில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் பேச வாய்ப்பு வழங்காதது குறித்து முறையிட்டனர்.

அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, சொத்து வரி இந்த ஆட்சியில் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்று கூறிகொண்டே அதிமுக கவுன்சிலர்களை அழைத்துக் கொண்டு கூட்டரங்கின் மையப்பகுதியில் நின்று திமுக அரசையும், மேயரையும் கண்டித்து கோஷமிட்டார். அவர்களை எதிர்த்து திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட்டதால் கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அவை காவலர்கள், அதிமுக கவுன்சிலர்களை வெளியேற்ற முயன்றபோது அவர்கள் வெளிநடப்பு செய்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x