Published : 04 May 2016 03:42 PM
Last Updated : 04 May 2016 03:42 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை: கருணாநிதி உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசை அணுகி, சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொண்டு, அதன் விளைவாக அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா ஜல்லிக்கட்டு பற்றிப் பேசி, அது நடைபெறாமல் போனதற்கு திமுக தான் காரணம் என்பதைப் போல தேர்தல் பிரச்சாரப் பொய்களில் ஒன்றாக பேசியிருக்கிறார். எனவே அதற்கான விளக்கத்தைத் தர வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.

திமுக ஆட்சியில் இருந்தபோது தான் 2007ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு போட்டிகள் அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட்டன.

அதைப்போலவே 2008ஆம் ஆண்டும் திமுக அரசால் முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நெறிப்படுத்துவதற்கெனச் சட்டம் ஒன்றே நிறைவேற்றப்பட்டது.ஆனால், அதிமுக ஆட்சியில் 2006-ம் ஆண்டிலேயே 15/1/2006 அன்று தமிழக அரசின் காவல் துறைத் தலைவர், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவையொட்டி அனுப்பிய சுற்றறிக்கையில் ஜல்லிக்கட்டு மற்றும் காளை வண்டிப் பந்தயம் போன்றவற்றை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சுற்றறிக்கையிலிருந்தே அதிமுக அரசுக்கு தொடக்க காலத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு நடத்துவதில் விருப்பமோ அக்கறையோ இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த விளையாட்டு குறித்து, அதிமுக ஆட்சிக் காலத்தில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில், பிராணிகள் நல அமைப்புகள் முறையிட்டுக் கொண்டதன் அடிப்படையில், 2014 - மே மாதத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்ததோடு, திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடர்ந்து நடத்துவதற்காக நிறை வேற்றப்பட்ட சட்டத்தையும் உச்ச நீதி மன்றம் ரத்து செய்து விட்டது.

உச்ச நீதி மன்றம் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்த அடுத்த கணமே விழித்தெழுந்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அதிமுக அரசு, ஜல்லிக்கட்டு நடத்துவதைப் பற்றியே கவலைப்படாமல், தூங்கிக் கொண்டிருந்து விட்டு, ஏழு மாதங்கள் கழித்து, 14-1-2015 அன்று அதாவது பொங்கல் திருநாளுக்கு ஒரே ஒரு நாள் முன்பு கடைசித் தருணத்தில் பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கடிதம் எழுதியது. அதிமுக அரசின் இத்தகைய அலட்சியம் காரணமாகத் தான் 2015ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

11-7-2011 அன்று மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஏற்கெனவே கண்காட்சி மற்றும் பயிற்சி மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்ட கரடி, குரங்கு, புலி, சிறுத்தை மற்றும் சிங்கம் ஆகிய ஐந்து விலங்குகளுடன் ஆறாவது விலங்காக காளையும் சேர்க்கப்பட்டது. இந்தச் சுற்றறிக்கையின் அடிப்படையில் தான் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டை 2014ஆம் ஆண்டு தடை செய்தது. 2011ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை சுற்றறிக்கை அனுப்பியவுடனேயே அதிமுக அரசு உடனடியாக அதை எதிர்த்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், 2016ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்காது.

உண்மையிலேயே ஜல்லிக்கட்டு நடத்துவதில், அதிமுக அரசுக்கு அதாவது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந் திருக்குமே யானால், 14.1.2015 அன்று அதிமுக அரசு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், காளையை அந்தப் பட்டியலில் சேர்ப்பதற்கு தனது எதிர்ப்பை நேரடியாகத் தெரிவிக்காமல், அந்தப் பட்டியலை ஏற்றுக் கொள்வதைப் போல குறிப்பிட்டிருந்தது. (To remove Bulls from the list of Performing Animals). ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டுமென்றால் மத்திய அரசு காளையை காட்சிப்படுத்தவும் பயிற்சிக்கும் உகந்தது (Performing Animal) என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை எடுத்த அதிமுக அரசு தான் ஜல்லிக்கட்டு நடக்க முடியாமல் போனதற்கும் தென்மாவட்ட மக்களின் ஏமாற்றத்திற்கும் காரணம் என்பது இதன் மூலம் விளங்குகிறது அல்லவா?

இப்படி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தவறான கருத்தினை எடுத்து வைத்தது மட்டுமல்லாமல் 6/8/2015 அன்று பிரதமர் மோடி சென்னையில் ஜெயலலிதாவை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்த நேரத்தில் தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவிலும் கூட காளையை காட்சிப்படுத்தவும் பயிற்சிக்கும் உகந்தது என அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளவில்லை.

ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு அதிமுக அரசு தொடர்ந்து செய்த துரோகம் தான் காரணம். எனவே திமுக ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசை அணுகி, சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொண்டு, அதன் விளைவாக அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x