Published : 18 May 2022 06:44 AM
Last Updated : 18 May 2022 06:44 AM

மத்திய அரசு நிதியுதவியுடன் தமிழகத்தில் ரூ.10,790 கோடியில் மின் விநியோக கட்டமைப்பு

சென்னை: தமிழகத்தில் சீரான மின் விநியோகம் செய்வதற்காக, மத்திய அரசு உதவியுடன் ரூ.10,790 கோடியில் மின்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மின் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மின் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. அதேசமயம், தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. இதுதவிர, மின் வாரியத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளையும் மேம்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து நிதியுதவிப் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு தொடங்கியுள்ள மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின்படி, நாடு முழுவதும் சீரான முறையில் மின் விநியோகம் செய்வதுடன், மின்சாரத்தை கொண்டுசெல்லும்போது ஏற்படும் மின் இழப்பைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ரூ.10,790 கோடி மதிப்பில் மின் விநியோக கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழக மின் வாரியத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், ரூ.8,600 கோடி மத்திய அரசு சார்பில் கடனாக வழங்கப்படும். மேலும், இந்தப் பணிகளை 5 ஆண்டுகளுக்குள் முடித்து விட்டால், மத்திய அரசு வழங்கும் கடன்தொகையில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மீதியை மட்டும் செலுத்தினால் போதுமானது.

மறு சீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள மின்வழித் தடங்களில் மீட்டர் பொருத்துவது, புதிதாக மின்வழித் தடங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வோர் ஆண்டுக்கும் இலக்கு நிர்ணயித்து, பணிகள் மேற்கொள்ளப்படும். நடப்பாண்டில் மின்தேவை அதிகரித்து வரும் இடங்களில் 26,300 டிரான்ஸ்ஃபார்மர்கள் பொருத்தப்பட உள்ளன. அத்துடன், மின்வழித் தடங்களும் அமைக்கப்படும். இந்தப் பணிகளை ரூ.2,050 கோடியில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x