

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நடிகர் எஸ்.வி.சேகர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கிளி மூக்கு கொண்ட சுக பிரம்ம மகரிஷியும் மார்க்கண்டேயரும் அமர்ந்திருக்கும் புகைப்பட அட்டையை கருணாநிதியிடம் கொடுத்தார் எஸ்.வி.சேகர்.
இதுபோன்ற விஷயங்களில்தான் கருணாநிதிக்கு நம்பிக்கை கிடையாதே. எப்படி கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு எஸ்.வி.சேகர் கூறியதாவது: முதன்முதலாக 1992-ல் கருணாநிதியிடம் சுக பிரம்ம மகரிஷியின் இந்த படத்தை அளித்தேன். இது யார் என்றார். ‘‘ஐயா, இவர் குபேரனுக்கே வெங்கடாஜலபதியிடம் இருந்து பணம் வாங்கிக் கொடுத்த சுக பிரம்ம மகரிஷி. அவர் மார்க்கண்டேயருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சி இது’’ என்றேன்.
அதற்கு அவர், ‘‘இப்படி கிளிமூக்கு போல பெண் கிடைத்தால் என்ன செய்வாய்?’’ என்றார். ‘‘இதைவிட பெரிய மூக்குள்ள பெண்ணைப் பார்த்துவிட்டேன் என்று நகைச்சுவையாகக் கூறவும், சிரித்துவிட்டார். அவரை சந்திக்கும்போதெல்லாம் இந்த படத்தைக் கொடுப்பேன். அவரும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார். அவர் பகுத்தறிவுவாதியாக, மதநம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் எந்த மதத்தினரையும் புண்படுத்தமாட்டார்.
இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.