Published : 18 May 2022 07:58 AM
Last Updated : 18 May 2022 07:58 AM

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று நினைவேந்தல்: தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் பங்கேற்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று(மே 18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்றுப் பேசுகிறார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை பழ.நெடுமாறன் புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி தமிழ் ஆர்வலர்கள் உற்றுநோக்கும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

இலங்கையில் கடந்த 2009-ம்ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற போரின்போது ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 13 ஆண்டுகள் கழித்து, இலங்கையில் தற்போது உள்ள இக்கட்டான சூழலில், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதில், கடந்த 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுடன், தமிழகபாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டனர். அண்ணாமலை பங்கேற்கிறார் என்பதால் பிற கட்சி தலைவர்கள் பலரும் நினைவேந்தலில் பங்கேற்கவில்லை.

இந்த நிகழ்ச்சியில், பழ.நெடுமாறன் பேசும்போது, இலங்கை பிரச்சினை தற்போது சர்வதேச பிரச்சினையாக மாறிவிட்டது. சொந்த நாட்டிலேயே ராஜபக்ச ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றி இருப்பது இந்தியாவுக்கு ஆபத்து என சொன்ன அண்ணாமலை, இது தொடர்பாகத் தெளிவாகவும் ஆழமாகவும், எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிப் பேசியுள்ளார். இது மகிழ்ச்சியைத் தருகிறது. ஒருகட்சியின் தலைவர் எப்படி இருக்கவேண்டுமோ, அப்படி அண்ணாமலை இருக்கிறார். பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்க தலைவராக இருக்கிறார் எனப் பேசியிருந்தார்.

பழ.நெடுமாறனின் இந்தப் பேச்சு, தற்போது தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர் நிலைப்பாடான கட்சிகள் மற்றும் அமைப்புகளின் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சாவூர் விளார் சலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று (மே 18) மாலை 5 மணிக்குதமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசவுள்ளார். அப்போது சென்னையில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியது தொடர்பாக விளக்கம் கிடைக்குமா என தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x